முதுபெரும் கம்யூனிஸ்டு தலைவர் சங்கரய்யா உடல் நலக்குறைவால் நேற்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 102. அரசு மரியாதையுடன் சென்னையில் இன்று வியாழக்கிழமை இறுதிச்சடங்கு நடைபெறுகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் முதுபெரும் தலைவர் சங்கரய்யா சுதந்திரப் போராட்டத் தியாகியான இவர், சென்னை குரோம்பேட்டையில் குடும்பத்துடன் வசித்து வந்தார். முதுமை காரணமாக வீட்டில் ஓய்வெடுத்து வந்த சங்கராய்யாவுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. சளி மற்றும் இருமல் தொல்லையால் கடந்த சில நாட்களாக அவர் அவதிப்பட்டு வந்தார்.
இதனையடுத்து கடந்த 13ஆம் தேதி சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சங்கரய்யா அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த போதிலும், சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று காலை 9:30 மணி அளவில் மரணமடைந்தார். அவருக்கு வயது 102. இது குறித்து தகவல் அறிந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உடனடியாக அப்போலோ மருத்துவமனைக்கு நேரில் சென்று சங்கரய்யாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அப்போது அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, தாமோ அன்பரசன், சேகர் பாபு, எம்.பி. க்கள், டி.ஆர். பாலு, ஆ. ராசா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

அதை தொடர்ந்து சங்கராய்யாவின் உடல் ஆம்புலன்ஸ் மூலம் குரோம்பேட்டில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு ம.தி.மு.க. பொதுச் செயலாளர் துரை வைகோ, தலைமை கழக செயலாளர் துரை வைகோ, தாம்பரம் மேயர் வசந்தகுமாரி, எம்.பி.க்கள், திருநாவுக்கரசு, ஜெகத்ரட்சகன், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத், தாம்பரம் மாநகராட்சி கமிஷனர் அழகுமீனா, எம்.எல்.ஏ.க்கள், இ. கருணாநிதி எஸ்.ஆர். ராஜா உள்பட ஏராளாமானோர் அஞ்சலி செலுத்தினர். அதை தொடர்ந்து மாலை 4:30 மணி அளவில் அவரது உடல் சென்னை தியாகராஜ நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைமை அலுவலகத்திற்கு கொண்டுவந்து பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
சங்கரய்யாவின் இறுதி சடங்கு அரசு மரியாதையுடன் நடைபெறும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதனை அடுத்து தலைவர்கள் பொதுமக்கள் அஞ்சலி செலுத்திய பின்னர் சங்கரய்யாவின் உடல் இன்று காலை 10:30 மணி அளவில் கட்சி அலுவலகத்தில் இருந்து ஆம்புலன்ஸில் எடுத்துச் செல்லப்பட்டு, பெசன்ட் நகர் மின் மயானத்தில் அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு நடைபெறுகிறது. பின்னர் தகனம் செய்யப்பட உள்ளது. இறுதி சடங்கில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, அரசியல் தலைமை குழு உறுப்பினர்கள் பிரகாஷ் காரத், அசோக் தவாலே, கேரள மாநில செயலாளர் கோவிந்தன், மேற்கு வங்காள மாநில செயலாளர் முகமது சலீம் உள்ளிட்ட அகில இந்திய அளவிலான தலைவர்கள் கலந்து கொள்கிறார்.

சங்கராவின் மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட் பீரோ இரங்கல் தெரிவித்துள்ளது. மேலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அனைத்து கிளைகளும் கட்சியின் கொடிய அரை பக்கத்தில் பறக்க விடுமாறு, அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்து ஒரு வாரம் துக்கம் கடைபிடிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம் என்று கூறப்பட்டுள்ளது.