Dhoni Movie (தோனி திரைப்படம்) தோனி தயாரிக்கும் லெட்ஸ் கெட் மேரிட் (LGM) படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. படத்தின் ஹரிஷ் கல்யாண் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.
கிரிக்கெட் வீரர்கள் சினிமாவில் கவனம் செலுத்துவது சமீபத்தில் அதிகரித்துவருகிறது. அதேபோல் கிரிக்கெட் தொடர்பான படங்களும், கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கை வரலாறும் திரைப்படங்களாக உருவாக்கப்படுகின்றன. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்களான ஹர்பஜன் சிங், இர்ஃபான் பதான் உள்ளிட்டோர் தமிழ் படங்களில் நடித்து ஆச்சரியப்படுத்தினர்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான மகேந்திர சிங் தோனிக்கு தமிழ்நாட்டில் ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர். அவரும் தமிழ்நாடு தனக்கு இரண்டாம் தாய் வீடு என பலமுறை குறிப்பிட்டிருக்கிறார். இந்தச் சூழலில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற தோனி திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியிருக்கிறார். இதனால் தோனி ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.
தோனி படம் தயாரிக்கப்போகிறார் என தெரியவந்ததும் அவர் எந்தப் படத்தை முதலில் தயாரிக்கவிருக்கிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. தமிழ்நாடு மீது தனக்கு இருக்கும் அன்பை உறுப்படுத்தும் விதமாக முதல் படத்தை தமிழில் தயாரிக்கிறார். தோனி என்ட்டெர்டெயின்மென்ட் தயாரிக்கும் தமிழ் படத்துக்கு லெட்ஸ் கெட் மேரிட் (LGM) என்று பெயரிடப்பட்டுள்ளது.
தோனி தயாரிக்கும் லெட்ஸ் கெட் மேரிட் படத்தில் ஹரிஷ் கல்யாண் ஹீரோவாக நடிக்கிறார். லவ் டுடே படத்தில் நடித்து புகழடைந்த இவானா கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் யோகிபாபு, நதியாஉள்ளிட்டோரும் நடிக்கின்றனர். குடும்பத்தோடு பார்க்கும் பொழுதுபோக்கு படமாக தயாராக இருக்கிறது. ரமேஷ் தமிழ்மணி என்ற இயக்குநர் படத்தை இயக்க அவரே படத்துக்கு இசையும் அமைக்கிறார். படத்தின் பூஜை சமீபத்தில் போடப்பட்டு ஷூட்டிங் மும்முரமாக நடந்துவருகிறது.

இந்நிலையில் லெட்ஸ் கெட் மேரிட் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. இதனை மகேந்திர சிங் தோனி தனது அதிகாரப்பூர்வ பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா ஆகியோர் உலக உருண்டைக்கு மேல் நின்றுகொண்டிருக்கும்படி இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அமைந்துள்ளது. லெட்ஸ்ட் கெட் மேரிட் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரானது ரசிகர்களிடையே வரவேற்பையும் பெற்றிருக்கிறது.
ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட மகேந்திர சிங் தோனி, “லெட்ஸ் கெட் மேரிட் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். நல்ல குடும்ப பொழுதுபோக்கான படத்தை பார்த்து ரசித்து சிரிப்பதற்கு தயாராக இருங்கள். LGM படக்குழுவிற்கு ஆல் தி பெஸ்ட்” என குறிப்பிட்டுள்ளார். இந்தப் படம் பெரும் வெற்றியடையும் என தோனி ரசிகர்கள் நம்பிக்கையுடன் இருக்கின்றனர்.