தாராபுரம் அருகே மனைவியை வேறு ஒருவருக்கு திருமணம் செய்த புரோக்கர் கணவர். தம்பதியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் தாராபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம், அடுத்த தாராபுரம் அருகே பாப்பனூத்தை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (29). இவர் விவசாயி. இவருக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு மகன் உள்ளான். கணவன் – மனைவி இடையே தகராறின் காரணமாக பிரிந்து வாழ்கின்றனர்.

இந்த நிலையில் ராதாகிருஷ்ணன் 2-வது திருமணம் செய்வதற்காக பெண் பார்த்துள்ளார். அப்போது கேரள மாநிலம் கொழிஞ்சாம்பாறையை சேர்ந்த ஒரு புரோக்கர் அறிமுகமாகி உள்ளார். அவர் கேரளாவை சேர்ந்த ஒரு ஏழை பெண் இருப்பதாக ராதாகிருஷ்ணனிடம் கூறி புகைப்படத்தை காட்டியுள்ளார்.
ராதாகிருஷ்ணனுக்கு அந்த பெண் பிடித்துபோனது. எனவே திருமண ஏற்பாடுகள் நடந்தது. அந்த பெண் ஏழை என்பதால் நகை போட்டு உதவும்படி அந்த புரோக்கர் கூறியுள்ளார். இதை அடுத்து ஒன்றரை பவுனில் நகை வாங்கி ராதாகிருஷ்ணன் போட்டுள்ளார்.

ரூ.1 லட்சம் பணம் கொடுத்ததாகவும், திருமண செலவுகளை ராதாகிருஷ்ணன் ஏற்றதாகவும் தெரிகிறது. இதை அடுத்து ராதாகிருஷ்ணனுக்கும், அந்த பெண்ணுக்கும் உடுமலை திருமூர்த்தி மலை கோயிலில் திருமணம் நடந்தது.
பின்னர் அனைவரும் தாராபுரத்துக்கு வந்தனர். அங்கு முதலிரவுக்கான ஏற்பாடுகள் நடந்தது. அப்போது தனக்கு மாதவிடாய் என கூறி அந்த பெண் முதலிரவை தவிர்த்துவிட்டார்.

மறுநாள் தனது தாய்க்கு உடல்நிலை சரியில்லை என்றும், பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும், தான் சென்று பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதை அடுத்து அந்த பெண்ணை பொள்ளாச்சி மருத்துவமனைக்கு ராதாகிருஷ்ணன் அழைத்து சென்றுள்ளார்.
அங்கு ராதாகிருஷ்ணனை நிற்க வைத்து விட்டு அந்த பெண் தப்பிச்சென்றார். தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ராதாகிருஷ்ணன் இது பற்றி தாராபுரம் போலீசில் புகார் அளித்தார்.

விசாரணையில், நகை, பணத்துக்காக ராதாகிருஷ்ணனை அந்த பெண் திருமணம் செய்திருப்பதும், புரோக்கராக செயல்பட்டவர் அந்த பெண்ணின் கணவர் என்பதும் தெரியவந்தது.
மேலும் அவர்கள் தங்களை பற்றி தெரியாமல் இருக்கவும், போலீசில் சிக்காமல் இருக்கவும் பெயரை மாற்றி கூறியுள்ளனர். புகாரின் பேரில் அந்த தம்பதியை பிடிக்க தனிப்படை போலீசார் கேரளா விரைந்துள்ளனர்.

ராதாகிருஷ்ணனை ஏமாற்றியது போல மேலும் பலரை இந்த தம்பதி ஏமாற்றியிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். எனவே அந்த தம்பதியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் தாராபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.