பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. பாலியல் தொல்லை அளித்ததாக தொடரப்பட்ட வழக்கில் தண்டனை வழங்கப்பட்டதை தொடர்ந்து விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்த நிலையில் இன்று வழக்கு விசாரணை.
தமிழகத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சரின் பாதுகாப்பு பணியில் இருந்த பெண் எஸ்.பி ஒருவருக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக இருந்த புகாரின் பேரில் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி ராஜேஷ் தாஸ் புகார் அளிக்க சென்ற பெண் எஸ்.பியை தடுத்து நிறுத்திய குற்றச்சாட்டில் முன்னாள் செங்கல்பட்டு எஸ்.பி கண்ணன் ஆகியோர் மீது விழுப்புரம் சி.பி.சி.ஐ.டி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அப்போது அவர் பாதுகாப்பு ஆலோசனை என்ற பெயரில் பெண் ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது. தன்னிடம் அத்துமீறிய சிறப்பு டி.ஜி.பி. மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து சட்டப்பூர்வநடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பெண் ஐ.பி.எஸ். அதிகாரி, தமிழக அரசின் உள்துறை செயலாளர் மற்றும் அப்போதைய போலீஸ் டி.ஜி.பி. திரிபாதி ஆகியோரிடம் புகார் அளித்தார்.

இந்த புகாரின்பேரில் சிறப்பு டி.ஜி.பி. பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்த புகார் தொடர்பாக சிறப்பு டி.ஜி.பி மற்றும் அவரது உத்தரவின்படி பெண் ஐ.பி.எஸ் அதிகாரியை மிரட்டி கார் சாவியை பறித்த செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் மீது 4 பிரிவுகளின் கீழ் விழுப்புரம் சி.பி.சி.ஐ.டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பெண் எஸ்.பிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தொடரப்பட்ட வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட நபர்களான முன்னாள் சிறப்பு டி.ஜி.பி ராஜேஷ்தாஸ் மீது 345(1), 352/A, பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட மூன்று பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் கடந்த ஜூன் 16ஆம் தேதி நீதிபதி புஷ்பராஜ் தீர்ப்பளித்தார். அதில் குற்றம் சாட்டப்பட்ட ராஜேஷ் தாசுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூபாய் 20500 அபராதமும், எஸ்.பி கண்ணனுக்கு ரூபாய் 500 அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

தங்களுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து இருவரும் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தனித்தனியாக மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை நீதிபதி பூர்ணிமா முன்னிலையில் நடந்து வருகின்றனர். இவ்வழக்கில் சிறப்பு டி.ஜி.பி நேரில் ஆஜராகி வாதத்தை தொடங்க வேண்டுமென நீதிபதி உத்தரவிட்டிருந்தார். அதன்படி நேற்று வழக்கு விசாரணைக்கு வந்த போது சிறப்பு டி.ஜி.பி ராஜேஷ் தாஸ் நேரில் ஆஜரானார். தொடர்ந்து டி.ஜி.பி தரப்பு வழக்கறிஞர்கள் வாதத்தை தொடங்க மேலும் அவகாசம் கேட்ட நிலையில், இதனை நிராகரித்த நீதிபதி, ஏற்கனவே போதிய அவகாசம் வழங்கி விட்டதாகவும் வாதத்தை தொடங்குமாறு கூறினார். தொடர்ந்து சிறப்பு டி.ஜி.பி தரப்பில் மேல்முறையீட்டு வழக்கை வேறு மாவட்டத்திற்கு மாற்றக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருப்பதாக தெரிவித்தனர். இதை எடுத்து வழக்கு விசாரணை இன்று 19ஆம் தேதி ஒத்துவைத்து உத்தரவிட்டார்.