நெல்லை மாவட்டம், அடுத்த மூன்றடைப்பு அருகே வாகைகுளத்தை சேர்ந்தவர் தீபக் ராஜா (30). இவர் இன்று தனது காதலியுடன் பாளையங்கோட்டை அருகே கேடிசி நகர் உள்ள பிரபல ஓட்டலுக்கு சென்று உள்ளார்.
அப்போது திடீரென அங்கு வந்த கும்பல் ஒன்று கண்ணிமைக்கும் நேரத்தில் அரிவாளால் ஹோட்டல் வாசலில் வைத்து தீபக் ராஜாவை அவரது காதலி கண் முன்பே கழுத்து மற்றும் முகத்தில் சரமாரியாக வெட்டி சாய்த்தனர். பின்னர் ரத்த வெள்ளத்தில் சரிந்த தீபக் ராஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தனது கண்முன்னே காதலனை வெட்டி கொலை செய்ததைக் கண்டு தீபக் ராஜாவின் காதலி கதறி அழுதார்.
இது குறித்து தகவல் அறிந்த பாளையங்கோட்டை போலீசார் மற்றும் நெல்லை மாநகர காவல் துணை ஆணையர் ஆதர்ஷ் பச்சேரா உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

முதல்கட்ட விசாரணையில் தீபக் ராஜா மீது ஏற்கனவே கொலை உள்பட சில வழக்குகள் நிலவில் இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக ஜாதி ரீதியாக நடைபெற்ற பல்வேறு குற்ற சம்பவங்களில் தீபக் ராஜாவுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2016-ல் நடைபெற்ற இரட்டை கொலை மற்றும் நெல்லை மாவட்டம் தாழையூத்தில் நடைபெற்ற மற்றொரு கொலை வழக்கிலும் தீபக் ராஜாவுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் தீபக்ராஜா கடந்த 2012 ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்ட தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் நிறுவனர் பசுபதிபாண்டியன் ஆதரவாளர் என்றும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.