தனுஷ் நடிக்கும் கேப்டன் மில்லர் படத்தை இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கி வருகிறார். இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். சத்திய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்கிறார். இப்படத்தில், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன் மற்றும் சுமேஷ் மூர், சிவராஜ்குமார் ஆகியோர் நடிக்கின்றனர். தற்போது இந்த படத்தினுடைய படப்பிடிப்பு தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் நடைபெற்று வருகிறது.
தென்காசியில் இப்படத்தின் படப்பிடிப்பு மூன்று மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் இன்று குண்டு வெடிக்கும் காட்சி படமாக்கப்பட்டுள்ளது. அப்போது, அங்கு உள்ள சுற்றுவட்டார மக்களுக்கு அந்த சத்தத்தை கேட்டு அச்சம் அடைந்துள்ளனர்.
பின்னர், அங்கு சென்று பார்க்கும் போது படப்பிடிப்பு நடைபெற்று வருவது தெரிய வந்துள்ளது. ஆனால், படக்குழு மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறையிடம் அனுமதி வாங்கவில்லை என தெரிந்தது. இதுகுறித்து, தென்காசி மாவட்ட ஆட்சியர் துரை ரவிச்சந்திரனுக்கு தெரிந்ததையடுத்து படப்பிடிப்பை தற்காலிகமாக நிறுத்த உத்தரவிட்டார்.