சந்திரனுக்கு ராக்கெட் அனுப்ப முடிகிறது. ஆனால் எண்ணெய் கழிவுகளை அகற்றுவதற்கான எந்திரம் கண்டுபிடிக்கப்படவில்லையா? என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் கேள்வி எழுப்பினார்.
சென்னை, எண்ணூர் கடலில் எண்ணெய் கசிவால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் நேற்று படகில் சென்று பார்வையிட்டார். பின்னர் அந்த பகுதி மீனவ மக்களுடன் பேசினார். அப்போது அவருடன் துணைத் தலைவர் ஏ.ஜி மவுரியா, பொதுச் செயலாளர் ஆ. அருணாச்சலம், மீனவர் அணி மாநில செயலாளர் ஆர். பிரதீப் குமார் ஆகியோர் உடன் இருந்தனர். எண்ணெய் கசிவு பாதிப்புகளை பார்த்த பின்னர், கமல்ஹாசன் நிருபரிகளிடம் கூறியதாவது;

நான் இங்கு வருவது முதல் முறை அல்ல. ஒவ்வொரு முறையும் வரும்போது இந்த இடம் தொடர்ந்து மேம்படும் என்று நம்பி தான் செல்கிறேன். ஆனால் அப்படியே தான் இருக்கிறது. இன்னும் மோசமாக தான் சென்றுள்ளது. இதற்கு இயற்கை தான் காரணம். நாங்கள் என்ன செய்ய முடியும் என்று சொல்லிவிட முடியாது. இப்போது எண்ணெய் கடலில் பிளாஸ்டிக் போர்வை விரித்தது போல மிதக்கிறது. இதனை தொடர்ந்து 17 ஆம் தேதிக்குள் எடுக்க வேண்டும் என்று கோர்ட்டு சொல்லியுள்ளது. ஆனால் நடந்த பாடி இல்லை. இன்னும் 17 நாட்கள் ஆனாலும் நடக்கப் போவதுமில்லை. வேலை செய்யக் கூடியவர்கள் யாரும் தொழில்நுட்ப வல்லுநர்கள் கிடையாது. அதனை அகற்றுவதற்கான எந்த கருவிகளும் பயன்படுத்தப்படவில்லை. வெறும் பிளாஸ்டிக் பக்கெட்டை கொடுத்து மீனவர்களை வைத்து அல்ல சொல்வது மனிதாபிமானமற்ற செயல்.
இந்த எண்ணெய் கசிவுக்கு காரணம் யார் என்று ஒவ்வொருத்தரும் ஆள்காட்டிக் கொண்டுதான் இருக்கிறார்கள். எண்ணெய் கசிவு கடவுள் கொடுத்த வரம் அல்ல. மனிதன் செய்த செயல். அதனை சுத்தம் செய்வது மீனவர்கள் வேலை இல்லை. அதற்கு என்று தொழில்நுட்ப வல்லுனர்கள் இருக்கிறார்கள். அவர்களை வரவழைத்து செய்ய வேண்டும். இந்த மாதிரியான உயிர் கொல்லி வேலைகளை செய்பவர்களுக்கு பெரும் தண்டனையை அரசு நிர்ணயிக்க வேண்டும். எப்படி சாலை விதிமுறைகளுக்கு பயன்படுகிறார்களோ, அதே போல் இதற்கும் அவர்கள் பயன்படுவார்கள். மீன்பிடி தொழில் தான் இங்கு நடக்கிறது. எப்படியும் மீனை எண்ணெயில் தானே பொறிக்க போகிறீர்கள். அதற்காக என்னை தடவி தந்து விட்டோம். பொறித்து கொள்ளுங்கள் என்று சொல்வது பொறுப்பான பதில் அல்ல.

இதற்கு காரணமானவர்கள் பாதிப்புக்கான மொத்த செலவையும் ஏற்க வேண்டும். சுத்தம் செய்யும் வேலையில் பெரும் பங்காக இருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கடல், ஆறு நதியில் எண்ணெய் கலந்து விளையாடுவது சரியானது அல்ல. ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கும் இதை சேர்த்து தான் சொல்கிறேன். சந்திரனுக்கு ராக்கெட் அனுப்ப முடிகிறது. ஆனால் இந்த எண்ணெய் கசிவுகளை அகற்ற இன்னும் எந்திரம் கண்டுபிடிக்கப்படவில்லையா. உலகத்தில் இல்லை. அதனால் இங்கும் இல்லை, என்று பொய் சொல்லப் போகிறீர்களா. இதற்கான கருவிகள் இருக்கின்றன. அதனை கொண்டு வருவதற்கான பெரும் செலவை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தான் ஏற்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.