ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 8 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 226 ரன்கள் குவித்தது. 227 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய பெங்களூரு அணியால் 218 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில், டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் ஃபாஃப் டூப்ளசிஸ் பந்து வீச்சை முதலில் தேர்வு செய்தார்.
சென்னை அணியின் தொடக்க பேட்ஸ்மேன்களாக ருதுராஜ் கெய்க்வாட், டெவோன் கான்வே ஆகியோர் களத்தில் இறங்கினர். ருதுராஜ் 3 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். இதையடுத்து அஜிங்யா ரஹானேவுடன் இணைந்த டெவோன் கான்வே அதிரடியாக ரன்களை குவித்தார். இந்த இணை 2 ஆவது விக்கெட்டிற்கு 74 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது.

ரஹானே37 ரன்களில் வெளியேற, அரைச்தம் கடந்த கான்வே 45 பந்துகளில் 6 பவுண்டரி மற்றும் சிக்சருடன் 83 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஷிவம் துபே 27 பந்துகளில் 52 ரன்கள் எடுக்க ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. அம்பதி ராயுடு 14 ரன்களும், மொயின் அலி 19 ரன்களும், ரவிந்திர ஜடேஜா 10 ரன்களும் எடுக்க சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 226 ரன்களை குவித்தது.
இதையடுத்து 227 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை நோக்கி பெங்களூரு அணி விளையாடியது. தொடக்க வீரர் விராட் கோலி 6 ரன்னில் வெளியேற அடுத்து வந்த மஹிபால் லோம்ரர் ரன் ஏதும் எடுக்காமல் நடையைக் கட்டினார். 15 ரன்களுக்கு 2 விக்கெட் என்ற நிலையில் பெங்களூரு அணி இருந்தபோது, கேப்டன் டூப்ளசிசுடன், மேக்ஸ்வெல் இணைந்து அதிரடிய ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இருவரும் 3 ஆவது விக்கெட்டிற்கு 126 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
மேகஸ்வெல் 36 பந்தில் 76 ரன்களும், டூப்ளசிஸ் 33 பந்தில் 62 ரன்னும் எடுத்தனர். அடுத்து வந்தவர்களில் ஷாபாஸ் 12 ரன்னும், தினேஷ் கார்த்திக் 28 ரன்னும் எடுத்தனர். 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த பெங்களூரு அணி 218 ரன்கள் மட்டுமே எடுத்து 8 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.