பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணி கடைசி பந்தில் த்ரில் வெற்றிபெற்றது. கடைசி ஒரு பந்தில் ஒரு ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஹர்சல் படேல் வீசிய பந்தை விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் தவறவிட்டதால் ஒரு ரன் எடுத்து லக்னோ அணி வென்றது.
16வது சீசனுக்கான 15வது லீக் போட்டியில் டூ பிளஸிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்த்து கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணி விளையாடியது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 212 ரன்கள் சேர்த்தது. ஆர்சிபி அணியில் விராட் கோலி, டூ பிளஸிஸ் மற்றும் மேக்ஸ்வெல் அரைசதம் அடித்து அசத்தினர்.

இதனைத் தொடர்ந்து லக்னோ அணி களமிறங்கியது. முதல் ஓவரிலேயே கைல் மேயர்ஸ் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழக்க, தொடர்ந்து வந்த தீபக் ஹூடா 9 ரன்களிலும், க்ருனால் பாண்டியா ரன் ஏதும் எடுக்காமலும் வெளியேறினர். இதனால் லக்னோ அணி 23 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதுமட்டுமல்லாமல் லக்னோ அணியை மீட்டெடுக்கும் பொறுப்பு ஸ்டாய்னிஸ் – கேஎல் ராகுல் தலையில் விழுந்தது. இதனைத் தொடர்ந்து ஹர்சல் படேல் அட்டாக்கில் கொண்டு வரப்பட்டார்.
அந்த ஓவரில் தொடங்கிய அதிரடி எங்கும் நிற்கவே இல்லை. இதனால் லக்னோ அணி 10 ஓவர்கள் முடிவில் 91 ரன்கள் சேர்த்தது. அதுமட்டுமல்லாமல் 25 பந்துகளில் அரைசதம் கடந்து ஸ்டாய்னிஸ் அசத்தினார். ஆனால் கரண் சர்மா சுழலில் சிக்கி 65 ரன்களில் அவர் ஆட்டமிழந்தார். தொடர்ந்து கேஎல் ராகுலும் 20 பந்துகளில் 18 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, ஆட்டம் கைமீறி போனது. ஆனால் திடீரென உள்ளே வந்த நிக்கோலஸ் பூரன் மைதானத்தின் நாலாப் பக்கமும் சிக்சர்களாக விளாசினார்.

கரண் சர்மா ஓவரில் 20 ரன்களும், ஹர்சல் படேல் ஓவரில் 18 ரன்களும், பார்னல் பந்துவீச்சில் 17 ரன்களும் விளாசப்பட்டது. இதன் காரணமாக 15 பந்துகளில் அரைசதம் விளாசி பூரன் மிரட்டினார். இதனால் கடைசி 24 பந்துகளில் லக்னோ அணி வெற்றிபெற 28 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. இந்த நிலையில் சிராஜ் அட்டாக்கில் வந்தார். சிறப்பாக வீசிய சிராஜ், கடைசி பந்தில் பூரன் விக்கெட்டை வீழ்த்தினார். இதனால் 19 பந்துகளில் 62 குவித்த பூரன் ஆட்டமிழந்ததால், மீண்டும் ரசிகர்கள் உற்சாக குரல் வெளிவந்தது.
இதனால் கடைசி 18 பந்தில் லக்னோ அணி வெற்றிபெற 24 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரில் 9 ரன்கள் சேர்க்கப்பட, 12 பந்தில் 15 ரன்கள் தேவை என்ற நிலை வந்தது. களத்தில் பதோனி – உனாத்கட் இருந்தனர். அப்போது பதோனி ஒரு பவுண்டரி அடிக்க, 9 பந்தில் 7 ரன்கள் தேவைப்பட்டது. அடுத்த பந்தில் சிக்சர் அடித்த போது, அவரது பேட் ஸ்டம்பில் பட்டு ஹிட் விக்கெட்டாக மாறியது. இதனால் பதோனி ஆட்டமிழந்து வெளியேறினார். இறுதி ஓவரில் லக்னோ அணி வெற்றிக்கு 5 ரன்கள் தேவைப்பட்டது.

கடைசி ஓவரை வீச ஹர்சல் படேல் அழைக்கப்பட்டார். அந்த ஓவரின் முதல் பந்தில் ஒரு ரன் எடுக்கப்பட, இரண்டாவது பந்தில் மார்க் வுட் போல்டாகி வெளியேறினார். இதனைத் தொடர்ந்து ரவி பிஷ்னாய் எதிர்கொண்ட முதல் பந்தில் 2 ரன்களை எடுத்தார். 4வது பந்தில் ஒரு ரன் எடுக்கப்பட, ஆட்டம் சமனில் இருந்தது.
இதன்பின்னர் 5வது பந்தில் உனாத்கட் ஆட்டமிழக்க, கடைசி ஒரு பந்தில் லக்னோ அணியின் வெற்றிக்கு ஒரு ரன் தேவைப்பட்டது. அதில், திடீரென எதிர்முனையில் நின்றிருந்த வீரரை ரன் அவுட் செய்ய முயற்சித்தார். ஆனால் அது நடுவரால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. இறுதியாக கடைசி பந்தை தினேஷ் கார்த்திக் தவறவிட, ஒரு ரன்னை லக்னோ அணி எடுத்து வெற்றிபெற்றது.