பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் விடுதலை படம் குறித்து பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.
ஆர்.எஸ் இன்ஃபோடெயின்மென்ட் எல்ரெட் குமார் தயாரிப்பில், தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர் வெற்றிமாறனின் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் விடுதலை பாகம் 1. எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து இப்படம் உருவாகி உள்ளது.

இந்தப் படத்தில் நடிகர் சூரி நாயகனாக நடிக்க, விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்தின் முதல் பாகம் கடந்த மார்ச் மாதம் 31-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. கடந்த வாரம் வெளியான படங்களில் வசூல் ரீதியாகவும் முதல் இடத்தில் விடுதலை இருப்பதாக கூறப்படுகிறது.
இந்தப் படத்தில் பவானி ஸ்ரீ, கெளதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், சேத்தன் மற்றும் பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இளையராஜா இசையமைத்த இப்படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ”விடுதலை… இதுவரை தமிழ்த் திரையுலகம் பாத்திராத ஒரு கதைக் களம். இது ஒரு திரைக்காவியம். சூரியின் நடிப்பு – பிரம்மிப்பு. இளையராஜா – இசையில் என்றும் ராஜா. வெற்றிமாறன் – தமிழ்த் திரையுலகின் பெருமை. தயாரிப்பாளருக்கு என்னுடைய வாழ்த்துகள். இரண்டாவது பாகத்திற்கு ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் விடுதலை படம் குறித்து பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. அந்த வீடியோவில் பேசிய தினேஷ் கார்த்திக், “படம் சூப்பரா இருந்ததுங்க. நான் ரொம்ப என்ஜாய் பண்ணேன். பொல்லாதவன் படத்திலிருந்து நான் வெற்றிமாறனுடைய பெரிய ரசிகன். வழக்கம்போல இந்தப் படத்தையும் கலக்கலா எடுத்திருக்காரு. சூரியோட நடிப்பு ரொம்ப நல்லா இருந்தது. இது இயக்குநரின் படைப்பு. கற்பனையே செய்ய முடியாத உழைப்பு ” என்றார்.