நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு சில மாதங்களே உள்ள நிலையில், யாரை வேட்பாளராக நிறுத்தினால் வெற்றி பெறலாம் என்கிற பட்டியலை வழங்கும்படி மாவட்ட செயலாளர்களுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் அல்லது மே மாதங்களில் நடைபெற உள்ளது. திமுக நாடாளுமன்ற தேர்தல் பணிகளை தொடங்கி விட்டது. வழக்கமாக அதிமுக தான் தேர்தல் பணிகளை முதலில் தொடங்கும். இந்த ஆண்டு திமுக முந்திக்கொண்டு பரபரப்பாக செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் நடந்த அதிமுக, பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில் 40 தொகுதிகளிலும் வெற்றிக்காக அதிமுக தொண்டர்கள் உழைக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அப்போது பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர். மாளிகையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் லோக்சபா தேர்தலின் போது தொண்டர்கள் நிர்வாகிகள் செயல்படுவது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.
இன்றைய ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட செயலாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, கூட்டணி குறித்தான முடிவை நான் பார்த்து கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார். கட்சிக்காக வேட்பாளர்களை தேர்வு செய்வது குறித்த வேலையில் இறங்குமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார். அதிமுகவில் யாரை வேட்பாளராக நிறுத்தினால் வெற்றி பெறலாம் என்கிற பட்டியலை வழங்கும்படி மாவட்ட செயலாளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இன்று மாலை வரை அனைத்து மாவட்ட செயலாளர்களையும் சென்னையில் இருக்கும் படி அவர் கேட்டுக்கொண்டதாகவும், எடப்பாடி மாவட்ட செயலாளர்களை தனியாக சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக துணை பொதுச்செயலாளர் முனுசாமி, இன்றைய கூட்டத்தில் தேர்தல் குறித்து ஆலோசிக்கப்பட்டது. வேட்பாளர் பட்டியல் தயாரிப்பது உட்கட்சி விவகாரம், அது குறித்து இப்போது சொல்ல முடியாது. தேர்தலை எதிர்கொள்ள மிக வேகமாக ஆயுத்தமாகி வருகிறோம் என கூறினார்.
இதனிடையே தமிழகம் மற்றும் புதுவை உள்ளிட்ட 40 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியை அதிமுக தீவிரம் காட்டியுள்ளது. இன்று மாலை முதல் சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் மாவட்ட செயலாளர்களிடம் தனித்தனியாக எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தவுள்ளார். அதிமுக கூட்டணியில் இருந்த பாஜக விலகிவிட்டது. தற்போதைக்கு SDPI கட்சி மற்றும் புதிய தமிழகம் கிருஷ்ணசாமியும் அதிமுகவுடன் நெருக்கம் காட்டி வருவதால் அவர் அதிமுக கூட்டணிக்கு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.