பல கோடி ரூபாய் கையாடல் புகார் : கல்லூரி டீன் தலைமறைவு – போலீஸ் வலைவீச்சு..!

2 Min Read

ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட திருவேற்காடு அடுத்த வேலப்பன்சாவடியில் சவீதா பல்கலைக்கழகத்திற்கு சொந்தமான கல்லூரி இயங்கி வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தில் பொறியியல், சட்டம், மருத்துவம், பல் மருத்துவம் உள்ளிட்ட ஏராளமான கல்லூரிகள் இயங்கி வருகின்றன.

- Advertisement -
Ad imageAd image

இந்த கல்லூரிகளில் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்தும் மாணவ, மாணவிகள் சேர்ந்து தங்கி படித்து வருகின்றனர்.

இந்த நிலையில், வேலப்பன்சாவடியில் உள்ள கல்லூரியில் 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் எம்பிஏ படித்து வருகின்றனர். அந்த மாணவர்கள் கடந்த மாதம் கல்லூரி நுழைவாயிலில் நின்று திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பல கோடி ரூபாய் கையாடல்

அதில், எம்பிஏ முதலாம் ஆண்டு படித்து வரும் மாணவர்கள் கல்வி கட்டண தொகையாக ரூ.3 லட்சம் வரை கட்டியுள்ளனர். கல்லூரி நிர்வாகம் கூறியதின் பேரில் டீன் பிரசன்ன சிவானந்தம் வங்கி கணக்கில் பணமாகவும், காசோலையாகவும், ஆன்லைனிலும் பணத்தை செலுத்தியுள்ளனர்.

ஆனால், தற்போது ஒவ்வொரு மாணவருக்கும் ரூ.50,000 முதல் ரூ.2 லட்சம் வரை கல்வி கட்டண நிலுவைத்தொகை இருப்பதாகவும் அதனை, உடனடியாக கட்ட வேண்டும். கட்டணத்தை செலுத்தினால் மட்டுமே வகுப்புகள் நடத்தப்படும் என்று கல்லூரி நிர்வாகம் சார்பில் தெரிவித்துள்ளனர்.

திருவேற்காடு போலீசார்

இதனால் 2 வாரங்களாக வகுப்புகள் எதுவும் நடத்தப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் கல்லூரி முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த திருவேற்காடு போலீசாரும், கல்லூரி நிர்வாகத்தினரும் மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதை தொடர்ந்து மாணவர்கள் கலைந்து சென்றனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட 10 மாணவர்களை கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்தது. இது தொடர்பாக மாணவர்கள் கூறியதாவது;- “கல்லூரி டீன் பிரசன்ன சிவானந்தம் மற்றும் மாணவர் சேர்க்கை தலைமை அதிகாரிகள் ராம் பிரபு, ஆகாஷ் ஆகிய மூவரும்,

மாணவர்களிடம் வசூலித்த பலகோடி ரூபாய் கல்வி கட்டணத்தை கையாடல் செய்து விட்டு தலைமறைவாகி விட்டனர். இதனால் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளோம்” என்றனர்.

ஆவடி காவல் ஆணையரக குற்றப்பிரிவு போலீசார்

இதுகுறித்து சவீதா கல்லூரி நிர்வாக பதிவாளர் கார்த்திக், கடந்த ஜூன் 1 ஆம் தேதி ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார் அளித்துள்ளார்.

அதன் அடிப்படையில் மூவர் மீதும் ஆவடி காவல் ஆணையரக குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தலைமறைவாக உள்ள 3 பேரையும் பிடிப்பதற்கு போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Share This Article
Leave a review