காவல் துறை மற்றும் போக்குவரத்து துறைகளுக்கிடையே மோதல் வலுப்பு: ஓபிஎஸ் கண்டனம்

2 Min Read
ஓ. பன்னீர்செல்வம்

காவல் துறை மற்றும் போக்குவரத்து துறைகளுக்கிடையே மோதல் வலுக்கும் அளவுக்கு அவல நிலையை ஏற்படுத்தியுள்ள தி.மு.க. அரசுக்கு கடும் கண்டனங்கள் என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

- Advertisement -
Ad imageAd image

இதுதொடர்பாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசுப் பேருந்துகளில் மக்கள் நிம்மதியாக பயணிக்க வேண்டுமென்றால், போக்குவரத்துத் துறை மற்றும் காவல் துறைக்கிடையேயான ஒருங்கிணைப்பு மிக, மிக அவசியம். ஆனால், இதற்கு முற்றிலும் முரணான சூழ்நிலை தமிழ்நாட்டில் நிலவுகிறது. காவல் துறை மற்றும் போக்குவரத்துத் துறைக்கு இடையேயான மோதல் போக்கு நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. அரசுப் பேருந்துகளில் பணி நிமித்தமாக காவலர்கள் செல்லும்போது, ‘வாரண்ட்’ இல்லாத பட்சத்தில், காவலர்களிடமிருந்து கட்டணம் வசூலிக்க போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளதாகவும், இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், காவல் துறையினர் விதிமீறும் அரசுப் பேருந்துகளுக்கு அபராதம் விதிப்பதாகவும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. உதாணரத்திற்கு, திருநெல்வேலி தூத்துக்குடி அரசுப் பேருந்தில் பணி நிமித்தமாக சீருடையுடன் பயணித்த காவலரிடம் ‘வாரண்ட்’ கேட்கப்பட்டதாகவும், இதனால் காவலருக்கும், நடத்துநருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், இறுதியில் காவலர் கட்டணம் செலுத்தி பயணித்ததாகவும் கூறப்படுகிறது.

இதுபோன்ற சம்பவங்கள் தமிழ்நாட்டில் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன. இரு ஒருபுறமிருக்க, மறுபுறம் செங்கல்பட்டு மாவட்டம், கிளாம்பாக்கம் பேருந்து முனையம் எதிரில் சாலையோரம் பேருந்தை நிறுத்தி, அதிலிருந்து பயணியரை இறக்கிவிட்டு, நடத்துநர் மற்றும் ஓட்டுநருக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்ததாக செய்திகள் வந்துள்ளன. இதுபோன்ற சம்பவங்களும் தமிழ்நாட்டில் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன.

ஓ.பன்னீர்செல்வம்

பொதுவாக, பணி நிமித்தமாக காவல் துறையினர் சீருடையுடன் அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பயணிக்கும்போது அவர்களிடம் கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை. இருப்பினும், தற்போது அதற்கான ஆணையினை காண்பிக்குமாறு போக்குவரத்துத் துறை நிர்பந்திப்பதன் காரணமாக துறைகளுக்கிடையே மோதல் வலுத்துள்ளது. இரு துறைகளுக்கிடையேயான மோதல் போக்கினை சீர்செய்ய வேண்டிய பொறுப்பும், கடமையும் தி.மு.க. அரசிற்கு உண்டு.

எனவே, முதலமைச்சர் இதில் உடனடியாகத் தலையிட்டு, காவல் துறை மற்றும் போக்குவரத்துத் துறை உயர் அதிகாரிகளை அழைத்துப் பேசி, இரு துறைகளுக்கிடையேயான மோதல் போக்கிற்கு முற்றுப்புள்ளி வைக்கவும், காவல் துறையினர் பணி நிமித்தமாக அரசுப் பேருந்துகளில் இலவசமாக பயணிக்க வழிவகை செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

Share This Article
Leave a review