சிஏஏ எனப்படும் குடியுரிமை திருத்தச் சட்டம் நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளதாக மத்திய அரசு அறிவிக்கை வெளியிட்டுள்ளது.
கடந்த 1955-ம் ஆண்டு இயற்றப்பட்ட குடியுரிமைச் சட்டத்தில் 11 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் வசிக்கும் வெளிநாட்டவருக்கு இந்திய குடியுரிமை வழங்கலாம் என விவரிக்கப்பட்டுள்ளது. ஆனால், 6 ஆண்டுகள் இந்தியாவில் இருந்தாலே குடியுரிமை வழங்க ஏதுவாக சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்தது பாஜக அரசு.

குறிப்பாக, 2014-ஆம் ஆண்டுக்கு முன்பு பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேச நாடுகளில் மத அடிப்படையில் இன்னல்களை எதிர்கொண்டவர்களுக்கே குடியுரிமை என விதிமுறை வகுக்கப்பட்டது.
அதிலும், இந்து, சீக்கிய, புத்த, சமண, பார்ஸி, கிறிஸ்தவ சமூகங்களைச் சேர்ந்தவர்கள் உரிய ஆவணங்கள் இல்லையென்றாலும் அவர்கள் குடியுரிமை பெற தகுதியானவர்கள்.

அண்டை நாடுகளில் இருந்து இந்தியாவிற்குள் வரும் இஸ்லாமியர்கள் இந்திய குடியுரிமை பெற முடியாது. இதேபோன்று, தமிழ்நாட்டில் நீண்ட காலமாக அகதிகளாக வாழ்ந்து வரும் இலங்கை தமிழர்களுக்கும் குடியுரிமை வழங்க இந்த சட்டத்தில் இடமில்லை.
கடந்த 2019-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த மசோதா மக்களவையில் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேறியது. மாநிலங்களவையில் அதிமுக எம்பிக்களின் ஆதரவுடன் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு, குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு பிறகு சட்டமானது.

மதத்தை அடிப்படையாக கொண்டு குடியுரிமை வழங்கும் சர்ச்சைக்குரிய இந்த குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு பாஜக அல்லாத மாநிலங்களைச் சேர்ந்த முதலமைச்சர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வந்தனர். அசாம், திரிபுரா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களிலும் கடும் எதிர்ப்பு எழுந்தது.
வங்கதேசத்தில் இருந்து வரும் அகதிகளால் தங்களது உரிமைகள் பறிபோகும் என வடகிழக்கு மாநில மக்கள் தெரிவித்தனர். வடகிழக்கு மாநிலங்கள் மட்டுமின்றி சிஏஏ சட்டத்தை அமல்படுத்த எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன.

குறிப்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஆகியோர் இந்த குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தனர் என கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
அதேவேளையில் அண்மையில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சிஏஏ சட்டம் நிச்சயம் அமல்படுத்தப்படும் என்றார்.