மரக்காணம் அருகே, பாமக பிரமுகரை கைது செய்ய கோரி மறியலில் ஈடுபட்ட கிராம மக்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே நடுக்குப்பம் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர்கள் அருண் வயது (27), கீர்த்தி வயது (27). இவர்கள் இருவரும் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள். அதே பகுதியை சேர்ந்தவர்கள் கோகுல் வயது (20), அனீஸ் வயது (18).
இந்த நிலையில், கல்லூரி மாணவர்கள் 4 பேரும் கடந்த 31ம் தேதி நடுக்குப்பத்தில் இருந்து ஒரே பைக்கில் முருக்கேரி சென்று உள்ளனர். அப்போது இவர்களது பின்னால் வந்த பாமக பிரமுகரின் கார், பைக் மீது மோதி உள்ளது. இதில் 4 பேரும் படுகாயம் அடைந்தனர்.

மேலும், இச்சம்பவம் குறித்து பைக்கில் சென்ற 4 பேரையும், நடுக்குப்பம் கிராமத்தை சேர்ந்த பாமக பிரமுகர் மாரிமுத்து (50), காரை ஓட்டி சென்ற ஐயப்பன் (45) மற்றும் இவர்களுடன் சென்ற சுகுமார் (40) ஆகிய 3 பேரும் வேண்டும் என திட்டமிட்டு கொலை செய்யும் நோக்கில் காரால் மோதியுள்ளனர், என படுகாயம் அடைந்தவர்களின் உறவினர்கள் மரக்காணம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
குற்ப்பாக, இந்த புகாரின் மீது மாரிமுத்து, ஐயப்பன், சுகுமார் ஆகியோர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் மரக்காணம் போலீசார் வழக்கு பதிவு செய்து ஐயப்பனை கைது செய்து, கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இதில் மாரிமுத்து மற்றும் சுகுமார் தலைமறைவாகிவிட்டனர். இந்நிலையில், தலைமறைவாக உள்ள இருவரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும் என கோரி நேற்று காலை நடுக்குப்பம் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த பொதுமக்கள் அப்பகுதியில் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

அப்போது அங்கு வந்து மரக்காணம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் சாலை மறியலை கைவிடவில்லை. இதையடுத்து மரக்காணம் இன்ஸ்பெக்டர் பாபு சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போதும் சாலை மறியலை கைவிடவில்லை. தலைமறைவாகி உள்ள இரண்டு பேரையும் கைது செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.
அதற்கு போலீசார், நாங்கள் அவர்களை உடனடியாக கைது செய்ய நடவடிக்கை எடுப்போம் என கூறினர். இருப்பினும் போராட்டக்காரர்கள் சாலை மறியலை கைவிடாததால், போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இதனால் மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து சிதறி ஓடினர். இதை தொடர்ந்து மறியல் போராட்டம் முடிவுக்கு வந்தது. இதன் காரணமாக நடுக்குப்பம் பகுதியில் பதற்றமும், பரபரப்பான சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது.