மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் ஆன்மிக குரு பங்காரு அடிகளார் உடல்நலக்குறைவால் காலமானார். மேல்மருவத்தூரில் துரைசாமி நாயக்கர் குடும்பம் செல்வாக்கானது. அவருடைய மகன் கோபால் நாயக்கர், நிலக்கிழார். கோபால் நாயக்கர்-மீனாம்பாள் தம்பதி மகனாக, 3-3-1942-ல் பங்காரு அடிகளார் பிறந்தார். தற்போது அவருக்கு வயது 82, இளமையிலேயே பக்தி மிக்கவராக விளங்கினார்.

கோவில் கருவறைக்குள் பெண்கள், தாழ்த்தப்பட்டவர்கள் உள்பட பக்தர்கள் அனைவரும் சென்று பூஜை நடத்தலாம் என்று அறிவித்து, இறைவனுக்கும், பக்தர்களுக்கும் இடையேயிருந்த இடைவெளியை நீக்கினார். ஆன்மிகப் பணியுடன், பல சமூகப் பணிகளையும் செய்து, பல லட்சக்கணக்கான பக்தர்களைப் பெற்றிருந்தவர் மேல்மருவத்தூர் சித்தர் பீடத் தலைவரான பங்காரு அடிகளார். பங்காரு அடிகளாரை பின்பற்றுபவர்களும் ஆதிபராசக்தி கோவிலின் பக்தர்களும் அவரை ‘அம்மா’ என்று அழைத்துவந்தனர்.

முன்னதாக உடல்நல குறைவு காரணமாக கோவில் வளாகத்தில் உள்ள வீட்டில் இருந்தபடியே அவர் மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், நேற்று மாலை 5 மணி அளவில் பங்காரு அடிகளார் மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவரது மரணச் செய்தியை அறிந்து பக்தர்கள் அதிர்ச்சி அடைத்தனர். தற்போது பக்தர்கள் அஞ்சலி செலுத்துவதற்காக மேல்மருவத்தூரில் குவிந்து வருகிறார்கள். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக, அவரது வீட்டில் வைக்கப்பட்டு இருக்கிறது. அவருக்கு பக்தர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

பங்காரு அடிகளாரின் இறுதிச்சடங்கு இன்று மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது. அவரது உடல் அடக்கம் அரசு மரியாதையுடன் நடைபெறும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார். இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேல்மருவத்தூர் சென்று, அங்கு பங்காரு அடிகளாரின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார், உடன் அமைச்சர்கள் துரை முருகன் , பொன்முடி மற்றும் k.n. நேரு அஞ்சலி செலுத்தினார்கள்.