சிதம்பரம் நடராஜர் கோவிலில் தீட்சிதர்கள் குழந்தை திருமணம் விவகாரம் – உயர்நீதிமன்றத்தில் அறநிலையத்துறை தகவல்…!

2 Min Read

சிதம்பரம் நடராஜர் கோவிலின் நிர்வாகத்தை பறிக்கும் உள்நோக்கத்தில் குழந்தை திருமணம் தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுத்திருப்பதாக தீட்சிதர்கள் கூறும் குற்றச்சாட்டு தவறானது என்று அறநிலையத்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

- Advertisement -
Ad imageAd image

சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள பொது தீட்சிதர்கள் 12 முதல் 15 வயதுடைய குழந்தைகளுக்கு திருமணங்கள் செய்து வைக்கின்றனர் என்றும், இந்த குழந்தை திருமணங்களை தடுக்க இந்து சமய அறநிலைத்துறை செயலாளர், ஆணைய சமூக நலத்துறை செயலாளர், கடலூர் மாவட்ட கலெக்டர், காவல் கண்காணிப்பாளர், அடங்கிய நிரந்தர கண்காணிப்பு குழுவை அமைக்க உத்தரவிட வேண்டும் எனக் கூறி வழக்கறிஞர் எஸ். சரண்யா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி கங்காபுர்வாலா நீதிபதி, பரத சங்கரவர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்து சமய அறநிலைத்துறை செயலாளர் மற்றும் ஆணையர் சார்பில் கடலூர் அறநிலைத்துறை உதவி ஆணையர் சந்திரன் பதில் மனு தாக்கல் செய்தார்.

குழந்தை திருமணம்

அதில் சிதம்பரம் நடராஜன் கோவிலில் தீட்சிதர்கள் மீது போக்சோ தடுப்பு மற்றும் திருமண தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்தது, கைது நடவடிக்கை தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையம் அனுப்பிய நோட்டீசைத் தொடர்ந்து இணை ஆணையர் அரசுக்கு அறிக்கை அனுப்பினார். அதில் பொது தீட்சிதர் குடும்பத்தினர் குழந்தை திருமண தடுப்பு சட்டத்திற்கு விரோதமாக திருமணங்கள் செய்து வைப்பதாக தொடர்ந்து புகார்கள் வந்ததன் அடிப்படையிலேயே கடலூர் மாவட்ட சமூக நலத்துறை அதிகாரிகள் காவல்துறையில் புகார் அளித்திருக்கிறார்கள். குழந்தை திருமணம் தொடர்பாக அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாருக்கும், அறநிலை துறைக்கும் எந்த தொடர்பும் இல்லை. அறநிலைத்துறை தரப்பில் தீட்சிதர்களுக்கு எதிராக எந்த புகாரும் கொடுக்கப்படவில்லை.

உயர்நீதிமன்றம்

சிதம்பரம் நடராஜர் கோவில் நிர்வாகத்தை தீட்சிதர்களிடமிருந்து பறிக்கும் உள்நோக்கத்தோடு சமூக நலத்துறை அதிகாரியும், அனைத்து மகளிர் காவல் நிலையத்தினரும் இந்த சட்ட நடவடிக்கையை எடுத்து இருப்பதாக தீட்சிதர்கள் கூறும் குற்றச்சாட்டு அச்சத்தின் காரணமாக கூறப்படும் தவறான குற்றச்சாட்டு. குழந்தை திருமணங்களை கண்காணிக்க மாவட்ட அளவில் குழுக்களை அமைப்பது என்பது அரசின் கொள்கை முடிவு. அதன் அடிப்படையில் தான் முடிவெடுக்க வேண்டும். மனுதாரரின் கோரிக்கை அரசின் பரிசீலனையில் உள்ளது என்று கூறப்பட்டிருந்தது. இதை அடுத்து வழக்கின் விசாரணை ஜனவரி 8ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.

Share This Article
Leave a review