காவல் உதவி ஆய்வாளரால் தொடர்ந்து அச்சுறுத்தப்பட்டு , அவமானப்படுத்தப்பட்டதால், காவல் நிலையம் முன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட இளைஞரின் தாய்க்கு மேலும் 10 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வேலூர் மாவட்டம் திருவலம் அருகே உள்ள குகையநல்லூர் காலனி பகுதியை சேர்ந்தவர் சரத். அறுவடை இயந்திரம் வைத்து தொழில் செய்து வந்தார். தலித் சமுதாயத்தை சேர்ந்த இவர் வேறு சாதியை சேர்ந்த 17 வயது சிறுமியை காதலித்து வந்த நிலையில், பெண்ணுடன் வீட்டை விட்டு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

இது தொர்பாக சரத் மீது மைனோர் சிறுமியை காதலித்து , ஏமாற்றியதாக மேல்பாடி காவல் நிலைய உதவி ஆய்வாளர் கார்த்தி என்பவர் கடந்த 2022 ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்தார் .
இதனிடையே உதவி ஆய்வாளர் கார்த்தி தன்னை அடிக்கடி மிரட்டி வருவதாகவும் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி சரத் கடந்த 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 11 ஆம் தேதி மேல்பாடி காவல் நிலைய எதிரில் தன்மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து தற்கொலைக்கு முயன்றார் . காயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதையடுத்து உதவி ஆய்வாளருக்கு எதிராக வன்கொடுமை தடைச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. விசாரணைக்கு பின் இந்த வழக்கு கைவிடப்பட்டது.
இந்த வழக்கில் வேலூர் நீதி மன்றத்தில் 1 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மட்டுமே இழப்பீடு வழங்கப்பட்ட நிலையில், வன்கொடுமை தடைச் சட்டப்படி முழு இழப்பீடு வழங்க உத்தரவிடக் கோரி சரத்தின் தாய் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இளந்திரையன், உயிரிழந்த சரத்தின் தாய்க்கு , 12 லட்சம் ரூபாய் இழப்பீடு மற்றும் கருணைத்தொகையை பெற உரிமை உள்ளது எனக் கூறி, ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள 1 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் போக மீதமுள்ள 10 லட்சத்து 70 ஆயிரம் ரூபாயை நான்கு வாரங்களில் வழங்கும்படி தமிழக அரசுக்கு நீதிபதி இளந்திரையன் உத்தரவிட்டுள்ளார்.