சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் போலீஸ் எனக் கூறி ஷு- க்கடை ஊழியரிடம் ரூபாய் 20 லட்சத்தை வழிப்பறி செய்த 5 பேர் ரயில்வே போலீசார் கைது செய்தனர்.
சென்னை, புதுபெருங்களத்தூர் சீனிவாசா நகரை சேர்ந்தவர் சிராஜுதீன் வயது 33. இவர் அதே பகுதியில் உள்ள ஷு- க்கடையில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் 3 மணி அளவில் அவர் ரூபாய் 20 லட்சம் பணத்துடன் சென்னை கடற்கரை ரயில் நிலையத்திற்கு வந்தார். தெற்குபக்கம் உள்ள நடைமேடை மேம்பாலம் வழியாக அவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்து கொண்டிருந்த 5 பேர் சிராஜுதீனை வழிமறித்தனர். அவர்கள் தாங்கள் போலீஸ் என கூறியுள்ளனர். பின்னர் திடீரென கத்தியை காட்டி மிரட்டி சிராஜுதீனிடம் இருந்த ரூபாய் 20 லட்சம் பணம் மற்றும் இரண்டு செல்போன்களை பறித்துக் கொண்டு ஓட முயன்றனர். இதனால் அதிர்ச்சடைந்த சிராஜுதீன் பணப்பையை விடாமல் பிடித்துள்ளார். பின்னர் 5 பேரும் சிராஜுதீனை படிக்கட்டில் தள்ளிவிட்டு பணப்பையை கொண்டு ஓடினர். இந்த சம்பவம் குறித்து சிராஜுதீன் எழும்பூர் ரயில்வே போலீசில் புகார் தெரிவித்தார்.

அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் ரயில்வே டி.எஸ்.பி ரமேஷ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, வழிப்பறி கொள்ளையர்களை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டது. கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை கைப்பற்றி, போலீசார் ஆய்வு செய்தனர். இந்த நிலையில் பூங்கா சென்ட்ரல் கடற்கரை உள்ளிட்ட ரயில் நிலையங்களில் தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். 4 குழுவாக பிரித்து தேடினர். இதேபோல கொள்ளையர்கள் திருடிச் சென்ற இரண்டு செல்போன் எண்களின் சிக்னலை ஆய்வு செய்தனர். அதில் ஒன்று பூங்கா ரயில் நிலையத்தில் இருப்பதை கண்டுபிடித்தனர். இதையடுத்து விரைந்து சென்ற போலீசார் செல்போன் வைத்திருந்த நபரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் கடலூரை சேர்ந்த பாலச்சந்தர் என்பது தெரியவந்தது. இதேப்போல கண்காணிப்பு கேமரா பதிவை வைத்து ஆய்வு செய்ததில் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்ட நபர் என்பது கண்டறியப்பட்டது. பின்னர் அவரை போலீஸ் நிலையம் அழைத்து வந்து மற்ற 4 பேர் குறித்து விசாரணை நடத்தினர். மேலும் அவர்களின் செல்போன் எண்களை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.

இதையடுத்து பாலச்சந்தர் கொடுத்த தகவலின் படியும் செல்போன் சிக்னல்களை வைத்தும் போலீசார் ஆய்வு செய்தனர். இதில் புதுச்சேரியை சேர்ந்த சிவா வயது 32, கடலூரை சேர்ந்த சதீஷ் வயது 22 ஆகிய இரண்டு பேரை கோயம்பேட்டில் வைத்து போலீசார் பிடித்தனர். போலீசாரின் கவனத்தை திருப்ப கூடுவாஞ்சேரிக்கு பஸ்ஸில் சென்று விட்டு அங்கிருந்து மின்சார ரயிலில் மீண்டும் கடற்கரை ரயில் நிலையத்திற்கு வந்த கடலூரை சேர்ந்த தமிழ்மணி வயது 27 என்பவரை போலீசார் பிடித்தனர். மற்றொரு குற்றவாளியான பிரகாஷ் வயது 29 என்பவரை கடலூரில் அவரது வீட்டில் வைத்து கையும் களவுமாக பிடித்தனர். இதையடுத்து 5 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த ரூபாய் 20 லட்சம் பணம் மற்றும் இரண்டு செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் தமிழ்மணி என்பவர் கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு பர்மா பஜாரில் உள்ள செல்போன் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார்.
அப்போது சிராஜுதீன் வியாபாரம் விஷயமாக பணத்தை கொண்டு வந்து கொடுப்பதை கண்டுள்ளார். இதையடுத்து கடலூர் சென்ற தமிழ்மணி அங்கே தன்னுடைய நண்பர்களிடம் இது குறித்து கூறியுள்ளார். தன்னுடைய 4 நண்பர்களையும் சென்னைக்கு வரவழைத்துள்ளார். ஒவ்வொரு நாளும் சிராஜுதீனை நோட்டமிட்டு வந்துள்ளார். நேற்று முன்தினம் பர்மா பஜார் வந்த சிராஜுதீன் பையில் பணம் எடுத்துச் செல்வதை குறி வைத்துள்ளனர். அப்போது நடை மேம்பாலத்தில் ஏறும்போது தாங்கள் போலீஸ் எனக் கூறி இந்த வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டது தெரிவந்தது. வழிப்பறி சம்பவம் நடந்த 5 மணி நேரத்தில் குற்றவாளிகளை ரயில்வே போலீசார் கைது செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல சிராஜுதீன் ரயிலில் எடுத்து வந்த ரூபாய் 20 லட்சம் பணத்திற்கு எந்தவித ஆவணமும் இல்லாததால் போலீசார் ஹவாலா பணமா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.