கடலூர் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவில் தேரோட்டம் இன்று கோலாகலமாக நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரின் வடம் பிடித்து இழுத்தனர்.
உலகப் புகழ்ப்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் சிவகாம சுந்தரி சமேத நடராஜமூர்த்தியின் மார்கழி ஆருத்ரா தரிசன விழா கடந்த 18 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனை தொடர்ந்து டிச.19 ம் தேதி சுவாமிகள் வெள்ளி சந்திரபிரபை வாகன வீதி உலா, டிச.20-ம் தேதி தங்க சூரியபிரபை வாகனத்தில் வீதி உலா, டிச.21-ம் தேதி வெள்ளி பூத வாகனத்தில் சாமி வீதி உலா, டிச.22-ம் தேதி வெள்ளி ரிஷப வாகனத்தில் தெருவடைச்சானும் டிச.23-ம் தேதி வெள்ளி யானை வாகன வீதி உலாவும், டிச,24-ம் தேதி தங்க கைலாச வாகனத்தில் ஒரு லட்சம் ருத்ராட்சம் மஞ்சத்தில் வீதி உலாவும், டிச,25-ம் தேதி தங்கரதத்தில் பிச்சாடனார் வெட்டுக் குதிரையில் வீதி உலாவும் நடைபெற்றது. இன்று ( டிச.26 ) செவ்வாய்க்கிழமை முக்கிய திருவிழாக்களில் ஒன்றான தேர் திருவிழா நடைபெற்றது. இன்று அதிகாலை 6 மணி அளவில் மேலதாளம் வழங்கிட வேத மந்திரங்கள் ஓதிட ஸ்ரீ நடராஜர், ஸ்ரீ சிவகாம சுந்தரி அம்பாள், ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ சுப்பிரமணிய, ஸ்ரீ சண்டிகேசர் ஆகிய சாமிகள் தனித்தனி தேர்தலில் எழுந்தருளினார்கள்.

இதனைத் தொடர்ந்து பக்தர்கள் தேர் வடம் பிடித்து சிவ சிவா, சிவ சிவா என்ற முழக்கத்துடன் இழுத்து சென்றனர். கீழவீதி, தெற்கு வீதி ,மேலவீதி, வடக்கு வீதி வழியாக இரவு நிலையை அடையும். நான்கு வீதிகளிலும் கட்டளைதாரர்கள் மண்டகப்படி செய்து செய்தனர். மேல வீதி மற்றும் வடக்கு வீதி முகப்பில் பருவத ராஜகுல மரபினர் ஸ்ரீ நடராஜர், ஸ்ரீ சிவகாமி அம்பாளுக்கு பட்டு சாத்தி படையல் செய்தனர். இரவு 8 மணிக்கு ஆயிரங்கால் முன்முகப்பு மண்டபத்தில் சிவகாமசுந்தரி, சமேத நடராஜமூர்த்தி சுவாமிகளுக்கு ஏககால லட்சார்ச்சனை நடைபெறுகிறது. நாளை (டிச.2 7) புதன்கிழமை அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பு காலை 4 மணி முதல் 6 மணி வரை சிவகாமசுந்தரி, சமேத நடராஜமூர்த்திக்கு மகாபிஷேகம் நடைபெறுகிறது. பின்னர் காலை 10 மணிக்கு சித்சபையில் ரகசிய பூஜையும், பஞ்ச மூர்த்தி வீதிஉலா வந்த பின்னர் பிற்பகல் 2 மணிக்கு மேல் ஆருத்ரா தரிசனமும், ஞானகாச சித்சபா பிரவேசமும் நடைபெறுகிறது.

டிச.28-ம் தேதி வியாழக்கிழமை பஞ்சமூர்த்தி முத்துப்பல்லக்கு வீதி உலாவுடன் உற்சவம் முடிவடைகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் பொது தீட்சிதர்கள் செய்து வருகின்றனர். உற்சவ 10 நாட்களும் மாலை 6 மணிக்கு சாயரட்சை பூஜையில் சித்சபை முன்பு மாணிக்க வாசகரை எழுந்தருளிச் செய்து திருவெம்பாவை உற்சவம் நடைபெறுகிறது. திருவிழாவையொட்டி சிதம்பரம் நகரில் பல்வேறு இடங்களில் அன்னதானம் நடைபெற்று வருகிறது. மேல வீதியில் உள்ள பெல்காம் அனந்தம்மாள் சத்திரத்தில் நிர்வாக அறங்காவலர் கனகசபை, ஆச்சாள்புரம் கிஷோர்குமார், வட்டத்தூர் பொறியாளர் செந்தில்குமார், சி. முட்லூர் ராமச்சந்திரன், சிதம்பரம் கருணாமூர்த்தி, திருக்கோவிலூர் ஞானவேல் ஆகிய ஆகியோர் கொண்ட குழுவினர் பக்தர்கள், பொது மக்களுக்கு தொடர்ந்து அன்னதானம் வழங்கி வருகின்றனர். திருவிழாவையொட்டி எஸ்.பி ராஜாராம் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.