மத்திய தொழில் பாதுகாப்பு படை காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம், ரைச்சூர் மன்வில் பகுதியைச் சேர்ந்தவர் ரவிகிரண் (37). மத்திய தொழில் பாதுகாப்பு படையை சேர்ந்தவரான இவர், கல்பாக்கம் அணுமின் நிலைய ஊழியர் குடியிருப்பில் தங்கி, இந்திராகாந்தி அணுசக்தி ஆராய்ச்சி மையத்தில் பாதுகாப்பு வீரராக பணிபுரிந்து வந்தார்.

இந்த நிலையில் இவர் வழக்கம் போல் அணுமின் நிலையத்திற்கு இரவு பணிக்கு சென்று நேற்று காலை பணி முடித்து தனது குடியிருப்புக்கு அணுமின் நிலைய பேருந்தில் தன்னுடன் பணிபுரியும் 18 பேருடன் சேர்ந்து வந்து கொண்டிருந்தார்.
அப்போது, திடீரென தான் கொண்டு வந்த `இன்சாஸ் பட் எண் – 68’ ரக துப்பாக்கியால் தன்னை தானே சுட்டுக்கொண்டார். இரவுப் பணி முடித்து தூக்க கலக்கத்தில் வந்த மற்ற வீரர்கள் அலறியடித்து எழுந்து பார்த்த போது, ரவிகிரண் ரத்த வெள்ளத்தில் மிதந்து பரிதாபமாக உயிரிழந்து கிடந்தார்.
உடனே அதே பேருந்தில் கல்பாக்கத்தில் உள்ள அணுவாற்றல் மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து சதுரங்கப்பட்டினம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட ரவிகிரண், எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என போலீசார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். குடும்ப பிரச்சனை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா,

மன அழுத்தம் காரணமா அல்லது அலுவலக பாதுகாப்பில் உயர் அதிகாரிகள் ஏதாவது தொல்லை கொடுத்தார்களா என்ற பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.