மறைந்த டிஐஜி விஜயகுமாரின் வழக்கினை தமிழக காவல் துறை அல்லாத சி பி ஐ போன்ற அமைப்பிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தமிழக பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திரிபாதி வலியுறுத்தியுளார் .
தற்கொலை எந்த பிரச்சினைக்கும் தீர்வல்ல என்று தெரிவித்துள்ள அவர் சி பி ஐ போன்ற வேறு ஒரு அமைப்பு விசாரணை மேற்கொண்டால்தான் தவறு நடந்திருக்கும் பட்சத்தில் அதனை முற்றிலுமாக களையப்பட வாய்ப்புள்ளது என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் .

“கோவை சரக டி ஐ ஜி விஜயகுமார் அவர்கள் இன்று காலை துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது.
மன அழுத்தத்தின் காரணமாக இவர் தற்கொலை செய்து கொண்டதாக கருதப்படுகிற நிலையில், உயர் காவல் துறை அதிகாரி, ஐ பி எஸ் பயின்றவர், மன உறுதி படைத்தவர் திடீரென விபரீத முடிவுக்கு சென்றுள்ளது வியப்பளிக்கிறது.
தற்கொலை எந்த பிரச்சினைக்கும் தீர்வல்ல என்றாலும், அலுவல் ரீதியாக அவர் மன அழுத்தத்திற்கு ஆளானாரா என்பது அறிந்து கொள்ளப்பட வேண்டும். தமிழக காவல் துறை அல்லாத சி பி ஐ போன்ற வேறு ஒரு அமைப்பின் மூலம் விசாரணை நடத்த தமிழக அரசு முன் வரவேண்டும்.

அப்படி செய்வதனால் மட்டுமே தவறுகள் நடந்திருந்தால் களையப்பட வாய்ப்புள்ளது என்பதோடு அலுவல் ரிதியாக அழுத்தங்கள் இல்லையென்பது தெளிவாகும் பட்சத்தில் காவல்துறை மீதான சிறு களங்கம் கூட துடைத்தெறியப்படும்.
இந்த கோரிக்கையை அரசியலாக பார்க்காமல் அரசின் நிர்வாகத்திற்கான ஆலோசனையாக கருதி செயல்படுத்துவது முதல்வருக்கு சிறப்பை தரும்.” என்று அவர் பதிவு செய்துள்ளார் .