நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திர சரக பகுதியில் விசாரணைக்கு வந்த குற்றவாளிகளின் பற்களை பிடுங்கியது தொடர்பாக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர் சிங் மீது வழக்கு தொடரப்பட்டு அந்த வழக்கு நெல்லை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு பொன்ரகு விசாரணை நடத்தி வந்தார்.
மேலும் இந்த வழக்கிற்கு கூடுதல் முக்கித்துவம் கொடுக்கும் விதமாக அமுதா ஐஏஎஸ் நிர்ணயிக்கப்பட்டார் . அமுதா ஐஏஎஸ் சமர்ப்பித்த அறிக்கையின் அடிப்படையில் இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்ற தமிழக அரசு உத்தரவிட்டது.
அதன் அடிப்படையில் சி.பி.சி.ஐ.டி. விசாரணை அதிகாரியாக இன்ஸ்பெக்டர் உலக ராணி நேற்று நியமிக்கப்பட்டார். இதையடுத்து வழக்கு தொடர்பான அனைத்து கோப்புகளையும் அவர் இன்று பெற்றுக் கொண்டார். குற்றப்பத்திரிகை நகல் மற்றும் வழக்கின் அனைத்து ஆவணங்களையும் நெல்லை மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி. பொன் ரகு, சி.பி.சி.ஐ.டி. விசாரணை அதிகாரி உலக ராணியிடம் ஒப்படைத்தார். இதனையடுத்து இந்த வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் குழு இன்று முதலே தொடங்கியுள்ளனர்.
இந்த வழக்கின் முக்கிய சாட்சிகளையும் , இதற்கு முன்பு இந்த வழக்கை விசாரணை செய்த காவல் அதிகாரிகளிடமும் சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் விரைவில் விசாரணை மேற்கொள்ள உள்ளனர் .