சென்னை மயிலாப்பூரில் நடந்த பாமக தொடக்க விழா பொதுக்கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்துகொண்டு உரையாற்றினார்.
அப்போது பேசிய அன்புமணி ராமதாஸ், “பாமக இல்லையென்றால் தமிழ்நாடு மட்டுமின்றி நாடே பல இழப்புகள் சந்தித்து இருக்கும். பாமக இல்லையென்றால் தமிழக அரசு 500 மதுக்கடைகளை மூடி இருக்காது. வட மாவட்டங்களில் தான் அதிக மதுவிற்பனை நடக்கிறது. ஆனால் அங்கு குறைந்த அளவிலான கடைகளே மூடப்பட்டுள்ளது. 108 ஆம்புலன்ஸ், சமச்சீர் கல்வி, ஆன்லைன் விளையாட்டுக்கான தடை கிடைத்திருக்காது. 2026 ஆம் ஆண்டு தேர்தலில் பாமகவுக்கு அனைவரும் வாக்களிக்க வேண்டும். அரை நூற்றாண்டுக்கு மேல் தமிழகத்தில் 2 கட்சிகள் ஆட்சி செய்து வருகிறது. 56 ஆண்டு காலமாக திராவிட கட்சிகள் தமிழகத்தில் என்ன செய்தார்கள்? ஆகவே பாமகவுக்கு ஒருமுறை வாய்ப்பு அளித்து பாருங்கள்.
சாதி என்று சொன்னாலே ஏதோ கெட்ட வார்த்தை போல சிலர் பார்க்கின்றனர். சாதி என்பது ஒரு அழகிய சொல், சாதி, மதத்தில் அழகான பழக்கவழக்கங்கள் மற்றும் வழிமுறைகள் உள்ளன. இதை எல்லாம் நாம் பெருமையாக கருத வேண்டும். ஆனால் சாதியால் வரும் அடக்குமுறைகளை நாம் விரட்ட வேண்டும். ஏற்றுத் தாழ்வுகள் ஒழிய வேண்டுமே தவிர சாதி மதங்கள் அல்ல” என்றார்.