சென்னையைச் சேர்ந்த ‘சவுக்கு’ என்ற யூடியூப் சேனலின் முதன்மை செயல் அதிகாரியான சங்கர், நேர்காணல் ஒன்றில், காவல்துறை உயர் அதிகாரிகள், பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசியதாக புகார்கள் எழுந்தன.
அதன் அடிப்படையில், கோவை மாநகர சைபர் கிரைம் காவல்துறையின் உதவி ஆய்வாளர் சுகன்யா அளித்த புகாரின் பேரில், 4 பிரிவுகளின் கீழ் சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிந்து கடந்த 4 ஆம் தேதி காலைதேனியில் உள்ள விடுதியில் கோவை தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனர்.

மேலும், அவருடன் விடுதியில் தங்கியிருந்த ராஜரத்தினம் (42), ஓட்டுநர் ராம்பிரபு (28) ஆகியோரையும் தேனி பழனிசெட்டிபட்டி காவல்துறையினர் விசாரித்தனர்.
அவர்களது காரில் கஞ்சா இருந்ததை கண்டறிந்த போலீசார் அதை பறிமுதல் செய்ததோடு, அவர்கள் இருவரையும் கஞ்சா வழக்கில் கைது செய்தனர். அப்போது சவுக்கு சங்கர் மீதும் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த நிலையில், பழனிசெட்டிபட்டி காவல் நிலைய அதிகாரிகள் நேற்று கோவை மத்திய சிறைக்கு சென்று, அங்கு அடைக்கப்பட்டிருந்த சவுக்கு சங்கரை, கஞ்சா வழக்கிலும் மீண்டும் கைது செய்தனர்.
இதற்கிடையே, கோவை சிறையில் அடைக்கப்பட்ட சவுக்கு சங்கரை 5 நாட்கள் தங்களது காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்கக் கோரி, கோவை சைபர் கிரைம் காவல்துறையினர், கோவை குற்றவியல் நீதித்துறை நடுவர் எண்.4-ல் மனுதாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுநீதித்துறை நடுவர் சரவணபாபு முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது விசாரணையை நாளைக்கு (மே 9) தள்ளி வைத்தார்.
அதேபோல், சவுக்கு சங்கருக்கு ஜாமீன் கோரி அவரது தரப்பு வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை 10 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

சவுக்கு சங்கரின் வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் நேற்று முன்தினம் இரவு செய்தியாளர்களிடம் கூறும் போது;- ‘‘மத்திய சிறையில் சவுக்கு சங்கரை காவலர்கள் தாக்கியுள்ளனர். சிறையில் அவரது உயிருக்கு ஆபத்து உள்ளது. சவுக்கு சங்கருக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க அனுமதி வழங்க வேண்டும்.
சவுக்கு சங்கரை, நீதிபதி நேரில் பார்க்க வேண்டும் என்றும், மனு தாக்கல் செய்துள்ளோம்’’ என்றார். இதற்கிடையே, இந்த மனுவின் அடிப்படையில் விசாரிக்க மாவட்ட சட்டப்பணிகள் ஆணையக் குழுவுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

அதை தொடர்ந்து மாவட்ட சட்டப்பணிகள் ஆணையக் குழுவின் வழக்கறிஞர் சண்முகவேலு உட்பட 3 பேர், மருத்துவர்கள் 2 பேர் கோவை மத்திய சிறைக்கு நேற்று சென்று சவுக்கு சங்கரிடம் விசாரித்தனர்.
இந்த நிலையில், சேலம் சைபர் க்ரைம் உதவி ஆய்வாளர் கீதா, சேலம் மாநகர சைபர் க்ரைம் போலீஸில் சவுக்கு சங்கர் மீது புகார் அளித்தார்.

இதை அடுத்து, சவுக்கு சங்கர் மீது ஆபாசமாக பேசுதல், அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல், பெண்களை இழிவுபடுத்துதல், தகவல் தொழில் நுட்ப சட்டம் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு என 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
அதேபோல், பெண் பத்திரிகையாளர் ஒருவரை சவுக்கு சங்கர் இழிவாக பேசியதாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேற்று மற்றொரு வழக்கை பதிவு செய்தனர்.

இந்த நிலையில், சவுக்கு சங்கரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தக்கோரி அவரது தாயார் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.