திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு சென்று விட்டு திரும்பிய போது செஞ்சி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் பத்தடிக்கு மேல் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் நான்கு வயது குழந்தை உட்பட 6 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே சத்தியமங்கலம் கிராமம் காவல் நிலையம் அருகில் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் மரத்தில் மோதி பத்தடி பள்ளத்தில் கவிழ்ந்தது. விபத்தில்
காரில் பயணம் செய்த திருச்சி மாவட்டம் மகராட்சிபட்டி கிராமத்தை சேர்ந்த நான்கு வயது ஆண் குழந்தை உள்பட 6 பேர் பலத்த காயமடைந்தனர்.
திருச்சி மாவட்டம் மகராட்சிபட்டி கிராமத்தில் இருந்து மாருதி ஆம்னி காரில் சேலம் மற்றும் திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலிற்கு சென்று சாமி தரிசனம் முடித்துவிட்டு,
செஞ்சி வழியாக திருச்சிக்கு செல்லும் வழியில் திண்டிவனம் – கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் சத்தியமங்கலம் கிராமத்தில் காவல் நிலையம் அருகே சாலை ஓரம் இருந்த மரத்தின் மீது மோதி,
10 அடிக்கு மேல் உள்ள பள்ளத்தில் தலை குப்புற கவிழ்ந்ததில், காரில் பயணம் செய்த குழந்தை உள்பட ஆறு பேர் பலத்த காயமடைந்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த சத்தியமங்கலம் போலீசார் கிராமத்தில் உள்ள இளைஞர்கள், பொதுமக்கள் உதவியுடன் பலத்த காயம் அடைந்தவர்களை மூன்று 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் விபத்தில் காரின் முன் பகுதி நொறுங்கியதால் காரின் இடுப்பாடுகளில் சிக்கி பலத்த காயம் அடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த கார் ஓட்டுநரை அக்கிராம இளைஞர்கள் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தீயணைப்பு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தாமதமாக வந்த தீயணைப்பு துறையினர் விபத்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் சத்தியமங்கலம் போலீசார் இந்த விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.