சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்தபோதும், சாமானிய ரசிகர்களுக்கும் வாழ்வாதாரத்தை உருவாக்கிக் கொடுத்து, இல்ல விழாக்களிலும் பங்கெடுத்ததாக தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்தை கண்ணீர் மல்க ரசிகர்கள் நினைவு கூர்ந்தனர்.
நான் விஜயகாந்தின் துாரத்து இடிமுழக்கம் படத்தில் இருந்து அவரது தீவிர ரசிகன். கரிமேட்டில்தான் மாவட்ட ரசிகர் மன்ற தலைமை அலுவலகம் இருந்தது. எனக்கு அவர் மாநில பொதுக்குழு உறுப்பினர் பொறுப்பை கொடுத்தார். விஜயகாந்த் பலருக்கும் வெளியில் தெரியாமல் உதவி இருக்கிறார். அப்போது மன்றத்தின் மாவட்ட தலைவராக இருந்த முத்து என்பவர் வயர்கூடை, சேர் பின்னுவார். அவர் கஷ்டப்படுகிறார் என சிலர் விஜயகாந்திடம் தெரிவித்தனர். உடனே அவருக்கு வாடகை கடை நடத்த 30 சைக்கிள் வாங்கிக் கொடுத்தார். அவரது மகளை படிக்க வைத்து, திருமணத்தையும் நடத்தி வைத்தார். என்னிடம் உனக்கு என்ன வேண்டும் என்றபோது, எனது திருமணம் உங்கள் தலைமையில் நடக்க வேண்டும் என்றேன். உச்சநட்சத்திரமாக இருந்த நிலையிலும் எனது திருமணத்தையும் நடத்தி வைத்தார். நான் மூளை நரம்பியல் மருத்துவமனை ஊழியராக இருந்தேன். திருமங்கலம் ரசிகர் செல்வம் என்பவரது மகனின் சிகிச்சைக்கு மருத்துவமனை டாக்டர் நாகராஜனிடம் கூறினார் விஜயகாந்த்.

அவர் கூறியதால் இலவசமாகவே சிகிச்சை அளித்து நலம்பெறச் செய்தார் டாக்டர்.
விஜயகாந்த் நடித்த கூலிக்காரன் படத்திற்கு அவர் வண்டி இழுப்பது போல மதுரையில் கட் அவுட் வைத்திருந்தனர். அதற்கான கம்புகளாலான சாரம் மதிப்பு அப்போதே ரூ.30 ஆயிரம் இருக்கும். அந்தக் கம்புகளை செல்லுார் ரசிகர் பால்பாண்டிக்கு பந்தல் போடும் தொழில் நடத்த வழங்கினார். அந்த பால்பாண்டி குடிசை வீட்டில் வசித்தார். அவர் தனது திருமணத்திற்கு வரும்படி விஜயகாந்தை அழைத்திருந்தார்.
அவரது உறவினர்கள் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் விஜயகாந்த் வருவாரா என சந்தேகம் கிளப்பினர். திருமணம் முடிந்ததும் பால்பாண்டி தம்பதியர் மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சென்றனர். அந்தநேரம் விஜயகாந்த் அவரது வீட்டுக்கு சென்றுள்ளார். வீடு பூட்டிக் கிடந்தது. பக்கத்து வீட்டாரிடம் விசாரித்த விஜயகாந்த் மணமக்களை எதிர்பார்த்து நின்று கொண்டிருந்தார். அவரை பார்க்க கூட்டம் கூடிவிட்டது. அங்கிருந்தவர்கள் பூட்டை உடைத்து வீட்டினுள் சென்று அமரும்படி கூறினர்.

அதன்படி விஜயகாந்த் வீட்டுக்குள் காத்திருந்தார். அலைபேசி வசதி இல்லாத அக்காலத்தில் இத்தகவலை பால்பாண்டியிடம் ஒருவர் சைக்கிளில் சென்று தெரிவித்து அழைத்து வந்தார். மணமக்களை வாழ்த்திய பின்பே விஜயகாந்த் சென்றார். எங்களைப் போன்ற சாமானியர் வீடுகளுக்கும் வந்து பெருமைப்படுத்திய மாமனிதர் விஜயகாந்த். விஜயகாந்த் எங்கள் குடும்ப நண்பர். முதலில் அவர் நல்ல மனிதர். யாரையும் விமர்சிக்க மாட்டார். கோபம் வந்தாலும் அடுத்த நொடி குழந்தை மனதாக மாறிவிடுவார். நல்ல ஞாபக சக்தியுள்ளவர். என்னை மாப்பிள்ளை என்று அவரும், அவரை மாமா என்று நானும் அழைப்போம். மதுரை அன்னக்குழி மண்டபம் பகுதியில் உள்ள வீட்டில்தான் அவரது முதல்படமான இனிக்கும் இளமை, துாரத்து இடிமுழக்கம் போன்ற படங்களுக்கு ஒத்திகை பார்த்தோம்.அங்குதான் அகில இந்திய விஜயகாந்த் ரசிகர் மன்றம் துவக்கப்பட்டது. அதன் தலைவராக தே.மு.தி.க., எம்.எல்.ஏ.,வாக இருந்த எனது மாமா சுந்தரராஜன் நியமிக்கப்பட்டார்.

சென்னையில் இருந்து எப்போது போனில் அழைத்தாலும் என்னிடமும் தவறாமல் பேசுவார். 1990ல் மீனாட்சி அம்மன் கோயிலில் பேன்சி கடை நடத்த உதவினார். 2003 க்கு பின் நான் அவரிடம் மிகவும் நெருக்கமானேன். அதன்பின் 20 ஆண்டுகளாக தொடர்ந்து கட்சியில் அவருடன் தமிழகம் முழுவதும் சென்று வந்தேன்.
தே.மு.தி.க., தலைவர் விஜய்காந்த் தான் படித்த சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை தே பிரித்தோ உயர்நிலைப்பள்ளி குறித்து அடிக்கடி பேச தவறுவதில்லை. விஜயகாந்த்தை அவரது பெற்றோர் தேவகோட்டை தே பிரித்தோ உயர்நிலைப் பள்ளி ( தற்போது மேல்நிலைப் பள்ளி) விடுதியில் சேர்த்து படிக்க வைத்தனர். 1966 — 68 இரண்டாண்டுகள் 8,9ம் வகுப்பு இங்கு படித்துள்ளார். ஆசிரியர் லாசர் என்பவரிடம் படித்ததை பெருமையாக கூறுவார். இடையில் விஜயகாந்த் படிப்பை முடிக்காமல் சென்று மீண்டும் திரும்பி வந்து தொடர்ந்துள்ளார். நடிகரான பிறகு ஒரு பேட்டிகளில் தான் படித்த தே பிரித்தோ பள்ளி பெயரை மறக்காமல் குறிப்பிடுவார். சிவகங்கை மாவட்டத்தில் கட்சி மேடைகள் மட்டுமின்றி அனைத்து மேடைகளிலும் பேசும் போது நான் தேவகோட்டை தேபிரித்தோ பள்ளியில் படித்தவன் இப்பகுதியை பற்றி நன்கு தெரியும் என குறிப்பிட தவறுவது இல்லை.

2001ம் முன்னாள் மாணவர்கள் நிகழ்ச்சிக்கு வந்தவர் பள்ளி வளர்ச்சிக்கு ரூ.ஒரு லட்சத்திற்கான செக்கை அப்போதைய தலைமையாசிரியர் அந்தோணி ஆரோக்கியத்திடம் வழங்கினார். விஜயகாந்த் படித்த காலத்தில் விடுதியில் தங்கி படித்த ஜூனியரான பா.ஜ., நிர்வாகி காரைக்குடி மெய்யப்பன் கூறுகையில், விடுதியில் இருந்த போது ஒரு மாணவனுக்கு ஒன்று என்றால் அச்சமின்றி முன்னின்று குரல் கொடுப்பார். அவர் கபடி விளையாட்டு வீரர். வட்டு எறிதல் போட்டியிலும் ஆர்வமுள்ளவர். அவர் படித்த போது தான் பள்ளியில் ஒரு பிரச்னைக்காக ஸ்டிரைக் நடந்தது,” என்றார். ”ஏழைகளுக்கு உதவும் குணத்தில், விஜயகாந்த்தை இரண்டாவது எம்.ஜி.ஆராக பல முறை பார்த்திருக்கிறேன்,” என, கவிஞர் முத்துலிங்கம் கூறியுள்ளார். அவர் அளித்த பேட்டி: ஏழை எளியவர்களுக்கு உதவும் குணத்தில், விஜயகாந்தை இரண்டாவது எம்.ஜி.ஆர்., என்று சொல்லும் வகையில், எத்தனையோ நிகழ்ச்சிகளை, நான் நேரில் பார்த்திருக்கிறேன். அதனால்தான் இவரை பலர், கருப்பு எம்.ஜி.ஆர்., என்கின்றனர்.

விஜயகாந்த் வயதை ஒட்டிய நடிகர்களில், இவருக்கு இணையான வள்ளல் குணம் படைத்தவர்கள் யாருமில்லை. 2011 தேர்தலில் தி.மு.க.,வையே வீழ்த்தி, எதிர்க்கட்சித் தலைவராக மக்கள் இவரை அமர்த்தினர் என்றால், அன்றைய இவரது மக்கள் செல்வாக்கு எப்படிபட்டது என்பதை, அரசியல் உலகம் அறிந்த ஒன்றாகும். ஜெயலலிதாவே விரும்பித்தான் இவருடன் கூட்டணி வைத்துக் கொண்டார். இவர் நடித்த படங்களில், கரிமேடு கருவாயன், சிறைப் பறவை, பெரிய மருது, குடும்பம், மீனாட்சி திருவிளையாடல், நீதியின் மறுபக்கம், செந்தூரப்பூவே, தம்பி தங்கக் கம்பி, எங்கள் ஆசான் போன்ற படங்களில், நான் பாடல்கள் எழுதியிருக்கிறேன். பழகுவதற்கு இனியவர். ஆறு ஆண்டுகளுக்கு முன், என் மகள் திருமண அழைப்பை அவரிடம் கொடுத்தபோது, தான் வர முடியாத நிலையை கடிதத்தில் விளக்கி எழுதி, தன் அலுவலகத்தைச் சேர்ந்த ஒருவரிடம் பூங்கொத்துக் கொடுத்து வாழ்த்தும் அனுப்பியிருந்தார்.

என் மகள் திருமணத்திற்கு வந்த முதல் வாழ்த்தே அவருடையது தான். அதை நான் மறக்க முடியாது. இந்தப் பண்பாடு, இன்று எத்தனை நடிகரிடம் இருக்கிறது?. அவருடைய இழப்பு திரையுலகம், அரசியல் உலகத்திற்கு மட்டுமல்ல நட்புக்கும் இழப்பு தான். ஆனாலும், நம்மை போன்றவர்கள் மனங்களில் என்றைக்கும் அவர் வாழ்வார். இவ்வாறு அவர் கூறினார்.