சிவகாசி அருகே செங்கமலபட்டி சுதர்சன் பட்டாசு ஆலையில் நடந்த வெடி விபத்தில் 10 பேர் உயிரிழந்த நிலையில், அந்த ஆலையின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்து மத்திய வெடிபொருள் கட்டுப்பாட்டு துறை (பெசோ) உத்தரவிட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே செங்கமலப்பட்டி பகுதியில் சரவணன் என்போருக்கு சொந்தமான சுதர்சன் பட்டாசு ஆலையில் மே 9 ஆம் தேதி ஏற்பட்ட பயங்கரமான பட்டாசு வெடி விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர்.

மேலும் 10-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த பட்டாசு ஆலை நாக்பூர் உரிமத்துடன் இயங்கி வந்தது. பட்டாசு ஆலை உரிமையாளர் சரவணன் மற்றொரு நபருக்கு குத்தகைக்கு விட்டதாகவும், நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகமான அளவில் ரசாயன மூலப்பொருட்கள் மற்றும் தொழிலாளர்களை பயன்படுத்தியது.

பேன்சி ரக பட்டாசு தயாரிப்பதற்கான போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் பாதுகாப்பற்ற முறையில், பட்டாசுகளை உற்பத்தி செய்தது.
அனுமதிக்கப்பட்ட அறைகளில் பட்டாசு உற்பத்தி செய்யாமல் மரத்தடியில் உற்பத்தியில் ஈடுபட்டது போன்ற பல விதிமீறல்களின் காரணமாக வெடி விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த வெடி விபத்து குறித்து காவல்துறையினரால் வழக்கு பதிவு செய்யப்பட்டு, தொழிற்சாலையின் உரிமையாளர், போர்மேன் மற்றும் உள்குத்தகைக்கு எடுத்தவர் ஆகிய மூன்று நபர்களின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதற்கிடையில், நேற்று விருதுநகர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில், பட்டாசு உரிமையாளர்கள் இதுபோன்ற தவறும் செய்தால் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், விதிகளை மீறி செயல்பட்ட இந்த ஆலையின் உரிமத்தை ரத்து செய்து மத்திய வெடிபொருள் கட்டுப்பாட்டு துறை (PESO) உத்தரவிட்டுள்ளது.