கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பரில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியுரிமை திருத்த சட்டம் (சிஏஏ) நிறைவேற்றப்பட்டது.
பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் மத ரீதியாக துன்புறுத்தப்பட்டு 2014 டிசம்பர் 31 ஆம் தேதிக்கு முன்பு இந்தியாவில் அடைக்கலம் புகுந்த இந்துக்கள், சீக்கியர்கள், பவுத்த மதத்தினர், ஜெயின் மதத்தினர், பார்சிகள், கிறிஸ்தவர்களுக்கு குடியுரிமை வழங்க இந்த சட்டம் வழிவகுக்கிறது.

அப்போது நாடுகளான பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகியவை முஸ்லிம் நாடுகள் என்பதால் சிஏஏ சட்டத்தில் முஸ்லிம்கள் சேர்க்கப்படவில்லை என்று மத்திய அரசு விளக்கம் அளித்தது. இதை ஏற்காமல் 2019 டிசம்பர் முதல் 2020 மார்ச் வரை டெல்லி உட்பட நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடந்தன.
டெல்லியில் பெரும் கலவரம் வெடித்தது. இந்த போராட்டங்களில் 65-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் 3,000-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இதனால் குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தப்படவில்லை.

இதற்கிடையே குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்துவதற்கான விதிமுறைகள் வெளியிடப்பட்டது. இத்துடன் இந்த சட்டம் அமலுக்கு வந்து விட்டதாக மத்திய அரசு அறிவித்தது.
குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்தியதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. எதிர்காலத்தில் ஒவ்வொருவரையும் பாதிக்கும் CAA எனும் அசுரனை அழைத்த துரோகிகள் என்ற பெயரில் மாநிலம் முழுவதும் திமுகவினர் சுவரொட்டி ஒட்டியுள்ளனர்.

இதேபோல் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், சிஏஏ அமல்படுத்தப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் கோவை தெற்கு மாவட்ட இளைஞரணி சார்பில், கோவை மாநகரின் பல்வேறு இடங்களில் இந்த சட்டம் ஏற்கத்தக்கது அல்ல என குறிப்பிட்டு பல்வேறு இடங்கலில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

அந்த போஸ்டரில் “பிளவுவாத அரசியலை முன்னிறுத்தி செயல்படுத்தப்படும் இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம் (2019) ஏற்கத்தக்கது. அல்ல” “Withdraw CAA” என குறிப்பிடப்பட்டுள்ளது.