மரக்காணம், சி.என்.ராமமூர்த்தி கட்சியினர் கூட்டம் நடத்த பாமகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் அங்கு பதற்றம் நிலவுகிறது. பின்னர் 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
விழுப்புரம் மாவட்ட அனைத்து இந்திய பாட்டாளி முன்னேற்ற கட்சியின் சார்பில் இன்று மரக்காணத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நாடாளுமன்ற தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் நடத்த ஏற்பாடு செய்திருந்தனர்.

அதில் கட்சியின் நிறுவனர் சி.என்.ராமமூர்த்தி, ‘நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது’ என்பது குறித்து பேச இருப்பதாக கூறப்பட்டது. அப்போது தகவல் அறிந்து மரக்காணம் பகுதி பாமகவினர், ‘சி.என்.ராமமூர்த்தி வந்தால் பிரச்சனை செய்வோம்’ என மரக்காணம் போலீசாரிடம் தெரிவித்தனர்.

அப்போது உடனே போலீசார், சி.என். ராமமூர்த்தி கட்சியினரை கூட்டம் நடத்த கூடாது என்று கூறியுள்ளனர். இதை அறிந்த சி.என்.ராமமூர்த்தி கட்சியினர், ‘எங்களுக்கு கூட்டம் நடத்த அனுமதி தர வேண்டும்.
இல்லையென்றால் சாலை மறியல், காவல் நிலையம் முற்றுகை உள்ளிட்ட போராட்டங்களை நடத்துவோம்’ என போலீசாரிடம் கூறியுள்ளனர். இதனால் அங்கு அசம்பாவிதங்களை தடுக்க நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே ‘வேறு ஒரு தேதியில் கூட்டம் நடத்துங்கள்’ என்று முக்கிய நிர்வாகிகளிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் சி.என்.ராமமூர்த்தி கட்சியினர் நடத்த இருந்த ஆலோசனை கூட்டம் ரத்து செய்யப்பட்டது.
மேலும் சென்னையில் இருந்து மரக்காணத்துக்கு புறப்பட்ட கட்சியின் நிறுவனர் சி.என்.ராமமூர்த்தியையும் வர வேண்டாம் என போலீசார் கூறினர். இதை அடுத்து அவரும் கூட்டத்தை ரத்து செய்து விட்டார். இதனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.