அமெரிக்கா, சியாட்டிலில் உள்ள ஆப்பிள் ஷோரூமில் ₹4.10 கோடி மதிப்புள்ள 436 ஐபோன்கள் திருட்டு போனது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாகவே திருடர்கள், நகைகள், பணத்தை மட்டுமே வழக்கமாக திருடுவதை பார்த்திருக்கிறோம். ஆனால், இங்கு சற்று வித்தியாசமாக திருடர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.
அமெரிக்காவில் சியாட்டிலில் அமைந்துள்ள ஆப்பிள் ஸ்டோருக்கு பக்கத்தில் அமைந்துள்ள ‘சியாட்டில் காபி கியர்’ காபி கடை உள்ளது. அந்த கடையின், கழிவறை சுவற்றை துளையிட்டு உள்ளே நுழைந்து திருடர்கள் ஐபோன்களை திருடியுள்ளனர். இச்சம்பவம் குறித்து காபி கடையின் சி.இ.ஓ ட்விட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், திருட்டை 2 நபர்கள் செய்திருப்பதாகவும், கட்டட வரைபட அணுகல் இருப்பவர்கள் மட்டுமே இதனை செய்ய முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார். ஐபோன்கள் திருட்டு குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
உலகம் முழுவதும் சுமார் 25 நாடுகளில் ஆப்பிள் நிறுவனம் , 552 ஆப்பிள் ஸ்டோர்கள் இயங்கி வருகின்றன. மும்பை மற்றும் டெல்லியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தான் ஆப்பிள் ஸ்டோர் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.