எருமைப்பாலுக்கு ரூ. 51, பசும்பாலுக்கு ரூ.42 வீதம் தமிழக அரசு உயர்த்துக – அன்புமணி

2 Min Read

ஆவின் பால் கொள்முதல் விலை உயர்வு போதாது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

- Advertisement -
Ad imageAd image

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில், “தமிழ்நாட்டில் ஆவின் நிறுவனம் மூலம் கொள்முதல் செய்யப்படும் பசும் பாலுக்கான விலை லிட்டருக்கு 35 ரூபாயிலிருந்து 38 ரூபாயாகவும், எருமைப்பாலுக்கான விலை 44 ரூபாயிலிருந்து, 47 ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்திருக்கிறது. தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள லிட்டருக்கு ரூ.3 விலை உயர்வு யானைப்பசிக்கு சோளப்பொறியைப் போன்றது. இது போதுமானதல்ல.

ஆவின் பால் கொள்முதல் விலை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் உயர்த்தப்பட்ட போதே அது போதுமானதல்ல என்று பாட்டாளி மக்கள் கட்சி கூறியது. ஆனால், அதை தமிழக அரசு பொருட்படுத்தவில்லை. அதன் விளைவாகத் தான் அதன் பின்னர் ஆவின் நிறுவனம் ஒவ்வொரு நாளும் கொள்முதல் செய்யும் பாலின் அளவு 10 லட்சம் லிட்டர் குறைந்தது. இப்போதும் பால் கொள்முதல் விலை நியாயமான அளவுக்கு உயர்த்தப்படவில்லை என்றால் ஆவின் பால் கொள்முதல் மேலும், மேலும் வீழ்ச்சியடைவதை தடுக்க முடியாது. இது ஆவின் நிறுவனத்தின் வீழ்ச்சிக்குத் தான் வழி வகுக்கும்.

ஆவின்

ஆவின் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.10 உயர்த்த வேண்டும் என கடந்த நான்கு ஆண்டுகளாக பால் உற்பத்தியாளர்கள் கோரி வருகின்றனர். கால்நடைத் தீவனங்களின் இன்றைய விலையுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் பால் கொள்முதல் விலை குறைந்தது லிட்டருக்கு ரூ.13 வழங்கப்பட வேண்டும். ஆனால், கடந்த ஆண்டு ரூ.3, இப்போது ரூ.3 என மொத்தம் ரூ.6 மட்டுமே உயர்த்தப்பட்டிருகிறது. இது போதுமானதல்ல. கால்நடைத் தீவனங்களின் விலை உயர்வுக்கு இணையாக பால் கொள்முதல் விலையை உயர்த்த முடியவில்லை என்றாலும் கூட, கடந்த நான்காண்டுகளுக்கு முன்பு பால் உற்பத்தியாளர்கள் கோரிய அளவிற்காவது உயர்த்த தமிழக அரசு முன்வர வேண்டும்.

ஆவின் நிறுவனம் கொள்முதல் செய்யும் எருமைப்பாலுக்கு லிட்டருக்கு ரூ. 51, பசும்பாலுக்கு லிட்டருக்கு ரூ.42 வீதம் விலையை உயர்த்தி வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே நேரத்தில் மக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்க ஆவின் பால் விற்பனை விலையை உயர்த்தக்கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

Share This Article
Leave a review