ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்திய அணி.
லட்சம் ரசிகர்கள் திரண்டிருந்த அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்தியஅணியின் கேப்டன் ரோஹித் சர்மா பீல்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியில் இஷான் கிஷனுக்கு பதிலாக ஷுப்மன் கில் களமிறங்கினார். பாகிஸ்தான் அணியில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. பேட்டிங்கை தொடங்கிய பாகிஸ்தான் அணிக்கு அப்துல்லா ஷஃபிக், இமாம் உல் ஹக் ஜோடி சிறப்பான தொடக்கம் கொடுத்தது.

8 ஓவர்களில் 41 ரன்கள் சேர்க்கப்பட்ட நிலையில் அப்துல்லா ஷஃபிக்கை (20), எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழக்கச் செய்து திருப்பம் ஏற்படுத்திக் கொடுத்தார் மொகமது சிராஜ். நிதானமாக விளையாடிய இமாம் உல் ஹக்கை 36 ரன்களில் வெளியேற்றினார் ஹர்திக் பாண்டியா. இதன்பின்னர் கேப்டன் பாபர் அஸமுடன் இணைந்த மொகமது ரிஸ்வான் பார்ட்னர்ஷிப்பை கட்டமைத்தார். இந்த ஜோடி ரன் ரேட் விகிதத்தை 5 என்ற அளவில் கொண்டு சென்றது. 29 ஓவர்களில் பாகிஸ்தான் அணி 150 ரன்கள் சேர்த்து வலுவாகவே இருந்தது. பாபர் அஸம் 57 பந்துகளில், 7 பவுண்டரிகளுடன் தனது 29-வது அரை சதத்தை அடித்தார். 30-வது ஓவரை வீசிய மொகமது சிராஜ், பாபர் அஸமை (50) போல்டாக்கினார். இது ஆட்டத்தின் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. 3வது விக்கெட்டுக்கு மொகமது ரிஸ்வானுடன் இணைந்து பாபர் அஸம் 82 ரன்கள் சேர்த்தார்.
33-வது ஓவரை வீசிய குல்தீப் யாதவ் இரு விக்கெட்களை வீழ்த்தி பாகிஸ்தான் அணிக்கு அதிர்ச்சி கொடுத்தார். சவுத் ஷகீலை 6 ரன்னில் எல்பிடபிள்யூ முறையில் வெளியேற்றினார் குல்தீவ் யாதவ். இதே ஓவரின் கடைசி பந்தில் ரிவர்ஸ் ஸ்வீப் விளையாட முயன்ற இப்திகார் அகமது (4) போல்டானார். இதன் பின்னர் பாகிஸ்தான் அணி சரிவை நோக்கி பயணித்தது.
ஜஸ்பிரீத் பும்ரா தனது அற்புதமான ஆஃப் – கட்டரால் மொகமது ரிஸ்வானை போல்டாக்கினார். ரிஸ்வான் 69 பந்துகளில், 7 பவுண்டரிகளுடன் 49 ரன்கள் சேர்த்தார். ஷதப் கானும் (2), பும்ராவின் வேகத்தில் ஸ்டெம்பை பறிகொடுத்தார். இதன் பின்னர் மொகமது நவாஸ் 4 ரன்களில் ஹர்திக் பாண்டியா பந்தை மிட் ஆன் திசையில் தூக்கி அடிக்க பும்ராவிடம் கேட்ச் ஆனது. கடைசி இரு விக்கெட்களான ஹசன் அலி (12), ஹரிஸ் ரவூஃப் (2) ஆகியோரை ரவீந்திர ஜடேஜா வெளியேற்ற 42.5 ஓவர்களில் பாகிஸ்தான் அணி 191 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.
இந்திய அணி தரப்பில் ஜஸ்பிரீத் பும்ரா, மொகமது சிராஜ், ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்கள் வீழ்த்தினர். பாகிஸ்தான் அணி தனது கடைசி 8 விக்கெட்களை 13 ஓவர்கள் இடைவெளியில் 36 ரன்களுக்கு கொத்தாக தாரை வார்த்தது.
வெற்றிக்குப் பின்னர் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறும்போது, “பந்து வீச்சாளர்கள் தான் எங்களுக்கு ஆட்டத்தை அமைத்துக் கொடுத்தனர். அது 190 ரன்கள் சேர்க்கக்கூடிய ஆடுகளம் என்று நான் நினைக்கவில்லை. ஒரு கட்டத்தில் பாகிஸ்தான் அணி 280 ரன்களை சேர்க்கக்கூடும் என எதிர்பார்த்தோம். ஆனால் பந்து வீச்சாளர்கள் காட்டிய மன உறுதிதான் இதற்கு காரணம். மிகவும் உற்சாகமடையவும் விரும்பவில்லை, மிகவும் தாழ்வாக இருக்கவும் விரும்பவில்லை. சமநிலையுடன் இருக்க விரும்புகிறேன். அமைதியாக இருந்து முன்னேறிச் செல்ல வேண்டும். நாங்கள் எதிர்கொள்ளும் ஒவ்வொரு அணியும் தரமானவை. போட்டியின் தினத்தில் நன்றாக விளையாட வேண்டும், அதைத்தான் நாங்கள் எதிர்நோக்குகிறோம்” என்றார்.