கோவை சர்வதேச விமான நிலையத்திற்கு அடையாளம் தெரியாத நபர் வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் அனுப்பி உள்ளார். இதனால் அங்கு வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் செயலிழப்பு படை (BDDS) குழு,
மத்திய தொழில் துறை பாதுகாப்பு படையின் (CISF) மோப்ப நாய் படை விமான நிலைய வளாகத்தில் சோதனை நடத்தினர். ஆனால் இது புரளி வெடிகுண்டு மிரட்டல் என அறிவித்துள்ளனர்.
இந்தியாவில் உள்ள 40 விமான நிலையங்களுக்கு இதே வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சலை அடையாளம் தெரியாத நபர் அனுப்பியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

கோயம்புத்தூர் சர்வதேச விமான நிலைய அதிகாரிகள் மின்னஞ்சலைப் பார்த்து, சி.ஐ.எஸ்.எஃப் மற்றும் கோவை நகர காவல் துறை அதிகாரிகளை எச்சரித்தனர். விமான நிலையத்தில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டு உள்ளன. அது எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம் என்று அந்த நபர் மெயிலில் தெரிவித்து உள்ளார்.
கோவை சர்வதேச விமான நிலையத்தின் வெளிப்புற பகுதியில் பி.டி.டி.எஸ் குழுவும், கோவை மாநகர காவல் துறையைச் சேர்ந்த மோப்ப நாய் குழுவும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டன. இது குறித்து விமான நிலைய இயக்குநர் எஸ். செந்தில் வளவன் கூறியதாவது;-

நாங்கள் எச்சரிக்கை முறையில் இருக்கிறோம், நாங்கள் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து உள்ளோம். இது ஒரு குறிப்பிட்ட அச்சுறுத்தல் மின்னஞ்சல் அல்ல.
இருப்பினும் நாங்கள் விமான நிலையத்தில் பாதுகாப்பை தீவிரப்படுத்தி உள்ளோம் என்று கோயம்புத்தூர் சர்வதேச விமான நிலையத்தின் விமான நிலைய இயக்குநர் எஸ் செந்தில் வளவன் தெரிவித்தார். வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சலால் விமான போக்குவரத்து பாதிக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.