சென்னையில் ஒரே நேரத்தில் 13 தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்..!

3 Min Read

சென்னையில், தனியார் பள்ளி ஒன்றுக்கு நேற்று காலை 10.30 மணியளவில் வந்த இ-மெயிலில், பள்ளியில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது. அது இன்னும் சற்று நேரத்தில் வெடித்து சிதறும் என்றும் முடிந்தால் தடுத்து உயிரை காப்பாற்றிக் கொள்ளுங்கள் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

- Advertisement -
Ad imageAd image

தகவலறிந்து அதிர்ச்சி அடைந்த பள்ளி நிர்வாகத்தினர், உடனடியாக இது குறித்து மாநகர காவல் ஆணையருக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து, உடனடி நடவடிக்கை எடுக்கும்படி கூடுதல் காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹாவுக்கு காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவு ஈடப்பட்டது.

 தனியார் பள்ளி ஒன்றுக்கு வெடிகுண்டு மிரட்டல்

மேலும், அதனை தொடர்ந்து மிரட்டல் விடுத்த நபரின் இ-மெயில் முகவரியை அடிப்படையாக வைத்து சைபர் க்ரைம் போலீஸார் உதவியுடன் தனிப்படை போலீஸார் விசாரணையைத் தொடங்கினர். இதற்கிடையே, மிரட்டல் விடுக்கப்பட்ட தனியார் பள்ளிக்கு விரைந்து சென்ற போலீசார், வெடிகுண்டு நிபுணர்களுடன் பள்ளி வளாகம், வகுப்பறை, மாணவரின் புத்தகப் பைகள் என அனைத்து இடங்களிலும் தேடும் பணியில் ஈடுபட்டனர். மேலும்,மெட்டல் டிடெக்டர், மோப்ப நாய் உதவியுடனும் சோதனை நடைபெற்றது.

இந்நிலையில், அடுத்தடுத்து மேலும் சில தனியார் பள்ளிகளில் இருந்தும், தங்கள் பள்ளிக்கும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக காவல் ஆணையருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த வகையில், அண்ணா நகர்,சாஸ்திரி நகர், பாரிமுனை, கிண்டி, ஆர்.ஏ.புரம், ஓட்டேரி, கீழ்ப்பாக்கம், கோபாலபுரம், துரைப்பாக்கம், நந்தம்பாக்கம், மடிப்பாக்கம், ஆவடிகாவல் ஆணையரக எல்லையில் உள்ள காட்டுப்பாக்கம் அடுத்த கோபுரசநல்லூர், திருமழிசை ஆகிய பகுதிகளில் உள்ள 13 தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.

பெற்றோர் அனைவரும் பள்ளிகள் முன்பு வாகனத்துடன் திரண்டனர்

இதைத்தொடர்ந்து அனைத்து இடங்களுக்கும் போலீஸார் விரைந்தனர். இதற்கிடையே பள்ளிக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் குறித்து மாணவர்களின் பெற்றோர்களுக்கு பள்ளி நிர்வாகம் தகவல்தெரிவித்தது. மேலும், பயப்படவேண்டாம். உங்கள் பிள்ளைகளை அழைத்துச் செல்லுங்கள் என்று குறுந்தகவலில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர், உடனடியாக கார், இருசக்கர வாகனம், வாடகைவாகனம் என பள்ளிகளுக்கு விரைந்தனர். ஒரே நேரத்தில் பெற்றோர் அனைவரும் பள்ளிகள் முன்பு வாகனத்துடன் திரண்டதால் அங்குகடும் வாகன நெரிசல் ஏற்பட்டது.போலீஸாரும், பள்ளி காவலர்களும் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே, பிள்ளைகளை அழைத்துவர இயலாத பெற்றோர் குறுந்தகவலைப் பார்த்தவுடன் பதற்றமடைந்தனர். அவர்கள் பள்ளி நிர்வாகத்தை தொலைபேசியில் தொடர்ந்து தொடர்பு கொண்டபடி இருந்தனர். அவர்களைச் சமாதானப்படுத்திய பள்ளி நிர்வாகிகள், பள்ளி வாகனத்தில் பிள்ளைகளை பத்திரமாக அனுப்பி வைக்கிறோம். கவலைப்பட வேண்டாம் என தெரிவித்தனர். அதன்படி, பள்ளி வாகனத்தில் மாணவர்களை அனுப்பி வைத்தனர். பள்ளிக்கும் அரை நாள் விடுமுறை வழங்கப்பட்டது.

காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா செய்தியாளர்களிடம் பேசினார்

இந்த வெடிகுண்டு மிரட்டல் தொடர்பான செய்தி, பிற பள்ளிகளுக்கும் பரவியது. இதனால் மிரட்டல் விடுக்கப்படாத பல பள்ளிகளும், தங்கள் பள்ளிக்கு அரைநாள்விடுமுறை அளித்து மாணவ, மாணவிகளை வீட்டுக்கு அனுப்பினர். இந்நிலையில், வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் கூடுதல் காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா செய்தியாளர்களிடம் கூறியதில் வெடிகுண்டு மிரட்டல்கள் அனைத்தும் இ-மெயில் வாயிலாக விடுக்கப்பட்டுள்ளது. மிரட்டலுக்கு உள்ளான கல்வி நிறுவனங்களில் வெடிகுண்டு நிபுணர்கள் மூலம் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

வெடிபொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை. எனவே, மிரட்டல் என்பதுபுரளி. மிரட்டல் விடுத்த நபரைக்கண்டறிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குற்றவாளியை விரைவில் கைது செய்வோம். இவ்வாறு அவர் கூறினார். சென்னையில் ஒரே நேரத்தில் 13 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெற்றோர் மத்தியில் பெரும் பதற்றத்தையும், கவலையையும் ஏற்படுத்திவிட்டது.

Share This Article
Leave a review