பில்கிஸ் பானு கூட்டு பாலியல் : 11 குற்றவாளிகளை விடுதலை செய்த குஜராத் மாநில அரசு – விடுதலை ரத்து செய்த உச்சநீதிமன்றம்..!

6 Min Read

இந்தியாவில் பில்கிஸ் பானு கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட விவகாரத்தில் 11 குற்றவாளிகளை முன் விடுதலை செய்த குஜராத் மாநில அரசின் உத்தரவை ரத்து செய்த உச்ச நீதிமன்றம், 2 வாரத்தில் குற்றவாளிகள் அனைவரும் சிறையில் சரணடைய வேண்டும் என்று அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. கடந்த 2002 ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் நடந்த கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து அம்மாநிலம் முழுவதும் பெரும் கலவரம் வெடித்தது.

- Advertisement -
Ad imageAd image

அப்போது முஸ்லிம்கள் தாக்கப்பட்டனர். இந்த தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவிகள் கொல்லப்பட்டனர். அப்போது நடந்த வன்முறையில் 5 மாத கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பானு கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதுடன், அவருடைய கண்ணின் முன்பாகவே அவருடைய 3 வயது மகள் உட்பட அவரது குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் கொடூரமாக கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 11 பேருக்கும் கடந்த 2008 ஆம் ஆண்டு சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து உத்தரவு பிறப்பித்தது.

இதனையே மும்பை உயர்நீதிமன்றமும் உறுதி செய்தது. இந்த நிலையில், குற்றவாளிகள் 11 பேரையும் கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி சிறை நன்னடத்தையை அடிப்படையாக் கொண்டு குஜராத் அரசு தண்டனை காலம் முடிவடைதற்கு முன்பே விடுதலை செய்து அறிவித்தது. இதனை தொடர்ந்து கோத்ரா வன்முறையின் போது பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்ணான பில்கிஸ் பானு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் ஒரு ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது.

பில்கிஸ் பானு

இதில்,‘‘கடந்த 2002-ம் ஆண்டு கோத்ரா கலவரத்தின் போது தன்னைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து, தனது குடும்ப உறுப்பினர்களைக் கொன்ற 11 குற்றவாளிகள் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டதை ஏற்க முடியாது. அவர்களுக்கான குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரம் இருந்தும் சிறை நன்னடத்தை எனக்கூறி குஜராத் அரசு அவர்களை விடுவித்துள்ளது. குறிப்பாக சம்பவம் நடந்தது குஜராத் என்றாலும் விசாரணை நடத்தி தண்டனை வழங்கியது மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நீதிமன்றம் தான்.

அதனால் குற்றவாளிகள் விடுதலை குறித்து மகாராஷ்டிரா அரசு தான் முடிவு செய்யலாமே தவிர, குஜராத் அரசு எந்த முடிவும் எடுக்க முடியாது. இதனால் குற்றவாளிகளின் அனைவரது விடுதலையையும் ரத்து செய்ய வேண்டும் என தெரிவித்திருந்தார். அதேப்போன்று பல பொதுநல மனுக்களும் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதையடுத்து வழக்கை விரிவாக விசாரித்த உச்ச நீதிமன்றம் கடந்த அக்டோபர் 12-ம் தேதி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தது.

இந்நிலையில் மேற்கண்ட வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.வி. நாகரத்னா மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோர் வழங்கிய தீர்ப்பில், ‘‘இந்த விவகாரத்தில் பில்கிஸ் பானு குற்றவாளிகளுக்கு எதிரான ரிட் மனு உகந்ததாகும். மேலும் பில்கிஸ் பானு வழக்கு விசாரணை மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்றதால் 11 பேரை விடுவிப்பது குறித்து அந்த மாநில அரசுதான் முடிவெடுக்க வேண்டும். பில்கிஸ் பானு விவகாரத்தில் குற்றவாளிகளுக்கு நிவாரணங்களை வழங்க குஜராத் அரசுக்கு அதிகாரம் கிடையாது.

பில்கிஸ் பானு கூட்டு பாலியல் 11 குற்றவாளிகள்

இதனால் குற்றவாளிகளை விடுவித்த குஜராத் மாநில அரசின் முடிவு செல்லாது என்பதால் அதனை ரத்து செய்கிறோம். குறிப்பாக பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகள் என்பது மிகவும் முக்கியமாகும். மேலும் பெண்களின் மரியாதையும் முக்கியம் வாய்ந்த ஒன்றாகும். அவர்கள் மரியாதைக்கு உரியவர்கள் ஆவார்கள்.
இதில் தன்னிச்சையான உத்தரவுகளை விரைவில் சரிசெய்து, பொதுமக்களின் நம்பிக்கையின் அடித்தளத்தை தக்கவைத்துக் கொள்வது இந்த நீதிமன்றத்தின் கடமையாகும். குறிப்பாக தண்டனை என்பது பழிவாங்குவதற்காக கிடையாது.

அது சீர்திருத்தங்களை மேற்கொள்வதாகும். குறிப்பாக இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் பல உண்மைகளை மறைத்தும், பொய்யான தகவல்களை தெரிவித்தும் குஜராத் அரசே முன்கூட்டி விடுதலை செய்யலாம் என்ற ஆணையை பெற்றுள்ளனர். அது செல்லாது அதனால் கோத்ரா வன்முறையின் போது பில்கிஸ் பானுவை கூட்டு பாலியல் வன்முறை செய்த 11 முக்கிய குற்றவாளிகளின் விடுதலையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்கிறது.

அவர்கள் அனைவரும் அடுத்த இரண்டு வாரத்தில் சிறையில் சரணடைய வேண்டும் என தீர்ப்பளித்தனர். சட்டத்தின் ஆட்சியில் இரக்கத்திற்கு இடம் கிடையாது. பில்கிஸ் பானு வழக்கின் தீர்ப்பில் பிளாட்டோ உள்ளிட்ட தத்துவஞானிகளின் கோட்பாடுகளை நீதிபதிகள் சுட்டிகாட்டியுள்ளனர். இதில்,‘‘தண்டனை என்பது சீர்திருத்தத்திற்காக தானே தவிர பழிவாங்குவதற்காக கிடையாது. ஒரு குற்றவாளியை குணப்படுத்த முடிந்தால் அவர் விடுவிக்கப்பட வேண்டும் என்பது மருத்துவத் துறையின் குணப்படுத்தும் கோட்பாட்டை நீதித்துறையுடன் சேர்த்து இணைக்கிறது.

பில்கிஸ் பானு கூட்டு பாலியல் விடுதலை ரத்து செய்த உச்சநீதிமன்றம்

ஆனால் அதேவேளையில் பாதிக்கப்பட்டவர்களின் உரிமை என்பதும் மிக முக்கியம். பெண்கள் மரியாதை பெறுவதற்கு உரியவர்கள். ஆனால் அதே பெண்களுக்கு எதிராக இவ்வளவு கொடூரமான குற்றத்தை செய்தவர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டுமா என்ற மிகப்பெரிய கேள்வி எழுகிறது. அவை அனைத்தையும் தான் இந்த வழக்கில் சாரம்சமாக நாங்கள் கையாண்டிருக்கிறோம். இதன்படி பார்த்தால் பில்கிஸ் பானு தாக்கல் செய்த மனு விசாரணைக்கு உகந்தது.

ஜனநாயக நாட்டைப் பொறுத்தவரை சட்டத்தின் ஆட்சிதான் நிலைநாட்டப்பட வேண்டும். அங்கு அனுதாபத்திற்கும், இரக்கத்திற்கும் எந்த இடமும் கிடையாது. சட்டத்தின் ஆட்சி இல்லாமல் நீதிமன்றங்களால் நீதியை நிலை நாட்டவே முடியாது. இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர். ராகுல்காந்தி பரபரப்பு கருத்து பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகள் 11 பேருக்கு விடுதலை அளித்த குஜராத் அரசின் முடிவை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது தொடர்பாக காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி கூறுகையில்;-

குற்றவாளிகளின் பாதுகாவலர் யார் என்பதை இந்தத் தீர்ப்பு மீண்டும் காட்டுகிறது. தேர்தல் ஆதாயங்களுக்காக கொலை நீதி என்ற போக்கு ஜனநாயக அமைப்பிற்கு ஆபத்தானது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு, குற்றவாளிகளுக்கு ஆதரவளிப்பவர் யார் என்பதை நாட்டுக்கு மீண்டும் ஒருமுறை காட்டியுள்ளது. பில்கிஸ் பானுவின் அயராத போராட்டம், திமிர்பிடித்த பாஜக அரசுக்கு எதிரான நீதியின் வெற்றியைக் குறிக்கிறது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

பில்கிஸ் பானு வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு வலிமையானது மற்றும் தைரியமானது. இந்த வலுவான மற்றும் தைரியமான தீர்ப்பை வழங்கியதற்காக உச்ச நீதிமன்றத்திற்கு நான் நன்றி தெரிவிக்கிறேன். ஐதராபாத் எம்.பி ஓவைசி: இந்த தீர்ப்பை நான் வரவேற்கிறேன். அது எதிர்காலத்தில் அனைத்து பலாத்கார குற்றவாளிகளுக்கும் ஒரு முன்னோடியாக செயல்படும் என்று நம்புகிறேன். அதனால் தான் குஜராத்தில் உள்ள பாஜக அரசும் , பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசும் குறைந்த பட்சம் பில்கிஸ் பானுவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.

விடுதலை ரத்து செய்த உச்சநீதிமன்றம்

நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில், பில்கிஸ் பானு விவகாரத்தில் முடிவு எடுக்கும் அதிகாரம் மகாராஷ்டிரா மாநில அரசுக்குதான் உள்ளது என்று உச்சநீதிமன்றத்தில் கடந்த 2022-ம் ஆண்டு குஜராத் அரசு சரியாக வாதிட்டுள்ளது. அதனால், பொய்யான தகவல்களை கூறி முன்கூட்டி விடுதலை குறித்து குஜராத் அரசு முடிவெடுக்கலாம் என்று குற்றவாளிகள் உச்ச நீதிமன்றத்தில் ஆணை பெற்ற பிறகு குஜராத் தனது நிலையை மாற்றிக் கொண்டுள்ளது. குற்றவாளிகளுடன் இணைந்து அவர்களுக்கு உடந்தையாக குஜராத் அரசு செயல்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா மாநில அரசுக்கு உள்ள அதிகாரத்தை குஜராத் அரசு பறித்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளனர். உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து தனது வக்கீல் ஷோபா குப்தா மூலம் பில்கிஸ் பானு வெளியிட்ட அறிக்கை;- இன்று எனக்கு உண்மையிலேயே புத்தாண்டு, நான் நிம்மதியாக கண்ணீர் விட்டேன். ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு நான் முதல் முறையாக சிரித்தேன், என் நெஞ்சில் இருந்து ஒரு மலை அளவு கல்லை தூக்கி எறிந்தது போல் உணர்கிறேன்.

என்னால் மீண்டும் சுவாசிக்க முடிகிறது. நீதியை இப்படித்தான் உணர முடிகிறது. நீதி என்பது இது தான். இந்த நியாயத்தை வழங்கியதற்காக உச்ச நீதிமன்றத்திற்கு நான் நன்றி கூறுகிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Share This Article
Leave a review