பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் மாவட்டத்தில் நடைபெற்ற துர்கா நவமி பண்டிகை கொண்டாட்டத்தில் , பூஜை பந்தலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ஐந்து வயது சிறுவன் , 2 பெண்கள் உற்பட 3 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .
துர்கா பூஜையின் மிக முக்கிய நிகழ்வான துர்கா நவமி கொண்டாட்டம் நகரின் ராஜா தள வட்டாரத்தில் கொண்டாட திட்டம் இடப்பட்டது , அங்கு பெருந்திரளான மக்கள் விழாவில் பங்கேற்க திரண்டிருந்தனர். இந்த துயர சம்பவத்தில் விழா ஒருங்கிணைப்பாளர்கள் பலரும் காயமடைந்தனர்.
சம்பவம் குறித்து கோபால்கஞ்ச் மாவட்ட மாஜிஸ்திரேட் நவல் கிஷோர் சவுத்ரி கூறுகையில் கூட்ட நெரிசலின் மத்தியில் குழந்தை விழுந்தது, அவரைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்ட இரண்டு பெண்களும் கீழே தவறி விழுந்து எழுந்திருக்க முடியாமல் கூட்ட நெரிசலில் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இன்று துர்கா நவமி என்பதால் மாநிலத்தில் பல பகுதிகளில் விழாவினை கொண்டாட பந்தல்கள் அமைக்கப்பட்டன . பந்தலில் இருந்த அதிகப்படியான கூட நெரிசல் காரணமாக குழந்தை தவறி கீழே விழுந்தது, அவரை காப்பாற்ற முயன்ற இரண்டு பெண்களும் விழுந்து நெரிசலில் சிக்கினர் . மேடை அமைக்கப்பட்ட பகுதியில் இருந்து 200 மீட்டர் தொலைவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது அவர்கள் உயிரிழந்தனர்.
தற்போது நாங்கள் சம்பவ இடத்தில் இருக்கிறோம், மேலும் தற்சமயம் நிலைமை கட்டுக்குள் உள்ளது” என்று சவுத்ரி செய்தியாளர்களிடம் கூறினார்.
காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்வர்ண பிரபாத் கூறுகையில், குழந்தை கீழே விழுந்தபோது பக்தர்கள் “பிரசாதம்” பெற வரிசையில் நின்றதாகவும், குழந்தை கூட்ட நெரிசலில் நசுங்காமல் பாதுகாக்க அந்த இரண்டு பெண்களும் குனிந்ததாகவும் ஆனால் எதிர்பாராத விதமாக அந்த பெண்களும் நெரிசலில் சிக்கி உயிர் இழந்தனர் .
இதனால் ஏற்பட்ட குழப்பமான சூழ்நிலையில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உற்பட 13 பேர் காயமடைந்தனர் .அவர்கள் உடனடியாக சதார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். துரதிஷ்டவசமாக 5 வயது சிறுவன் மற்றும் அந்த இரண்டு பெண்மணிகளும் உயிரிழந்தனர். மீதமுள்ளவர்கள் அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில், நிலைமையை கட்டுக்குள் வைத்திருக்க, சம்பவம் நடந்த இடத்தைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது , என்று கண்காணிப்பாளர் ஸ்வர்ண பிரபாத் தெரிவித்துள்ளார் .