முதல் படத்திலேயே தான் ஒரு தலைசிறந்த இயக்குநர் என்பதை நிரூபித்திருக்கிறார் என அயோத்தி இயக்குநரை நடிகர் ரஜினிகாந்த் வெகுவாக பாராட்டியுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் எப்பொழுதுமே அவரைக் கவரும் படங்களை பாராட்டத் தவறுவதில்லை. அந்த வகையில் சமீபத்தில் வெற்றிமாறனின் விடுதலை முதல் பாகத்தை பார்த்த ரஜினிகாந்த், இயக்குநர் வெற்றிமாறன், நடிகர் சூரி, தயாரிப்பாளர் எல்ரெட் குமார் ஆகியோரை சந்தித்து பாராட்டு தெரிவித்திருந்தார்.

மேலும் விடுதலை படம் குறித்து ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ளதாவது, ”விடுதலை.. இதுவரை தமிழ்த் திரையுலகம் பார்த்திராத கதைக்களம். இது ஒரு திரைக்காவியம். சூரியின் நடிப்பு – பிரமிப்பு. இளையராஜா – இசையில் என்றும் ராஜா, வெற்றிமாறன் – தமிழ்த் திரையுலகின் பெருமை. தயாரிப்பாளருக்கு என்னுடைய வாழ்த்துகள். என்று குறிப்பிட்டிருந்தார்.
இதனையடுத்து தற்போது சசிகுமாரின் அயோத்தி படம் குறித்தும் ட்வீட் செய்துள்ளார். அவரது பதிவில், அயோத்தி… நண்பர் சசிகுமாருக்கு ரொம்ப நாட்களுக்கு பிறகு அருமையான கருத்துள்ள ஒரு வெற்றிப்படம். முதல் படத்திலேயே தான் ஒரு தலை சிறந்த இயக்குநர் என்று நிரூபித்திருக்கிறார் ஆர். மந்திரமூர்த்தி. தயாரிப்பாளருக்கு என்னுடைய பாராட்டுகளும் வாழ்த்துகளும் என்று குறிப்பிட்டுள்ளார்.

அயோத்தி…
தயாரிப்பாளருக்கு என்னுடைய பாராட்டுகளும், வாழ்த்துகளும்!
நடிகர் சசிகுமார் பேட்ட படத்தில் ரஜினிகாந்த்த்தின் நண்பராக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்திலும், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லால் சலாம் படத்திலும் நடித்துவருகிறார். இதனையடுத்து ஜெய் பீம் இயக்குநர் டிஜே ஞானவேல் இயக்கும் படத்தில் ரஜினிகாந்த் நடிக்கிறார்.