புதுச்சேரியில் பகலில் பேக்கரியில் வேலை செய்து கொண்டு இரவில் பைக் திருட்டில் ஈடுபட்டு வந்த 3 பேரை கோரிமேடு போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து போலீசார் 17 வாகனங்களை பறிமுதல் செய்தனர். புதுவையில் கடந்த சில மாதங்களாக பைக் திருட்டு அதிகமாக நடைபெற்று வந்தது. இதுதொடர்பாக காவல் நிலையங்களில் புகார்கள் குவிந்தன. இதனை அடுத்து, புதுவை முழுவதும் சி.சி.டி.வி கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி பைக் திருடர்களை பிடிக்குமாறு போலீசாருக்கு சீனியர் எஸ்.பி நாரா சைதன்யா உத்தரவிட்டார். அதன்பேரில், போலீசார் பைக் திருட்டு நடைபெற்ற பகுதிகளில் உள்ள சி.சி.டி.வி கேமிராக்கள் மூலம் பைக் திருடர்களை அடையாளம் காணும் முயற்சியில் இறங்கினர்.

இந்த விசாரணையில், அவர்கள் கிருஷ்ணகிரியை சேர்ந்த வேலன் வயது (32), சிவக்குமார் வயது (20), மணிகண்டன் வயது (30) என்பதும், இவர்கள் ஓட்டி வந்தது திருட்டு பைக் என்பதும் தெரியவந்தது. மேலும், கடந்த 3 ஆண்டுகளாக இவர்கள் புதுவை லெனின் வீதியில் தங்கி பேக்கரியில் வேலை செய்து வந்துள்ளனர்.
அதில் வேலன் மீது திருப்பூர் காவல் நிலையத்தில் இருசக்கர வாகனம் திருடிய வழக்கு நிலுவையில் உள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக பேக்கரியில் வேலை செய்து வந்த இவர்கள், பைக் திருட்டில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

தற்போது பகல் நேரங்களில் பேக்கரியில் வேலை செய்தும், பின்னர் இரவு நேரங்களில் 3 பேரும் சேர்ந்து வீட்டு வாசல்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களை திருடியுள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்தது. புதுச்சேரி பகுதிகளான;- லாஸ்பேட்டை, கோரிமேடு, பெரியகடை, காலாப்பட்டு, உருளையன்பேட்டை, முதலியார்பேட்டை, கிருமாம்பாக்கம் உள்பட பல இடங்களில் இவர்கள் பைக்குகளை திருடுவார்கள்.
பின்னர் புதுவை பேருந்து நிலையம், ரயில் நிலையம் மற்றும் அவர்கள் வசிக்கும் வீட்டின் அருகே உள்ள இடங்களில் பதுக்கி வைத்து விற்க திட்டமிட்டிருந்தது தெரியவந்தது. இதனை அடுத்து, போலீசார் அவர்கள் பதுக்கி வைத்திருந்த 17 இருசக்கர வாகனங்களை அதிரடியாக பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.20 லட்சம் ஆகும். பின்னர், 3 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.