மூணாறு அருகே தங்க புதையலுக்காக தாத்தா, பேத்தியின் தலையை துண்டித்து நரபலி கொடுத்த சம்பவம் பெரும் பரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கேரளா, மூணாறு அருகே உள்ள கட்டப்பனை பகுதியை சேர்ந்த நண்பர்கள் நிதிஷ், விஷ்ணு. இவர்கள் கடந்த 2-ம் தேதி அதே பகுதியில் உள்ள ஒர்க் ஷாப்பில் திருட முயன்றது தொடர்பாக போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்துள்ளனர்.

இதை அடுத்து போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்திய போது, இருவரும் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதோடு மட்டுமல்லாமல், பணம், தங்கப்புதையல் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தாத்தா, பேத்தியை கொடூரமாக கொன்று நரபலி கொடுத்த அதிர்ச்சி தகவலும் வெளிவந்தது.
போலீசார் இதுகுறித்து கூறியதாவது;- கட்டப்பனை அருகே உள்ள காஞ்சியாறு பஞ்சாயத்து சகரா சந்திப்பை சேர்ந்தவர் விஜயன். இவருக்கு விஷ்ணு என்ற மகனும், திருமணமான மகளும் உள்ளனர். மகளுக்கு 6 மாத பெண் குழந்தை இருந்தது. இவர்கள் அனைவரும் வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன், நிதிஷ் விஷ்ணுவுக்கு அறிமுகமாகி நண்பர்களாகினர். அப்போது விஷ்ணுவின் வீட்டுக்கு நிதிஷ் அடிக்கடி சென்று, அவரது குடும்பத்துடன் பழகி வந்தார்.
மேலும் தனக்கு மாந்திரீக வித்தைகள் தெரியும் என அவர்களை நம்ப வைத்துள்ளார். இந்த நிலையில், குழந்தையை நரபலி கொடுத்தால் பணம், தங்கப்புதையல் கிடைக்கும் என விஷ்ணுவிடம் நிதிஷ் தெரிவித்துள்ளார்.

இதை அடுத்து கடந்த 2016-ல் விஜயன், விஷ்ணு மற்றும் குடும்பத்தினர் சேர்ந்து வீட்டிலிருந்த 6 மாத பெண் குழந்தையை மாந்திரீக பூஜை செய்து கொன்றனர். பின்னர் குழந்தையின் உடலை வீட்டின் மாட்டுத் தொழுவத்தில் புதைத்தனர்.
அதன்பிறகு விஜயன் குடும்பத்தினர் காஞ்சியாறு பஞ்சாயத்தில் உள்ள கக்காத்துகவலை பகுதிக்கு மாறி, அங்கு வாடகை வீட்டில் குடியேறினர். அப்போது மேலும் ஒருவரை நரபலி கொடுத்தால் கண்டிப்பாக பணம், தங்கப்புதையல் கிடைக்கும் என விஷ்ணுவிடம் நிதிஷ் ஆசை வார்த்தை கூறியுள்ளார்.

இதை அடுத்து விஷ்ணு தனது தந்தை விஜயனை நரபலி கொடுக்க முடிவு செய்தார். சில மாதங்களுக்கு முன்பு, குழந்தையை கொன்ற அதே பாணியில் விஷ்ணு, நிதிஷ் இருவரும் சேர்ந்து விஜயனை சுத்தியலால் அடித்துக் கொன்று நரபலி கொடுத்தனர்.
பின்னர் அவரது தலையை துண்டாக வெட்டி, உடல் உறுப்புகளையும் வெட்டி வீட்டிலேயே புதைத்தனர். இதன்பிறகு ஒன்றும் நடக்காதது போல் ஊருக்குள் சகஜமாக நடமாடி வந்துள்ளனர், என்றனர்.

இதனிடையே போலீசார் கக்காத்துகவலையில் உள்ள வீட்டிற்கு சென்று விஜயனின் உடலை நேற்று முன்தினம் தோண்டி எடுத்தனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக உடலை கோட்டயம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், விஜயனின் வீட்டில் நடத்திய சோதனையில் மாந்திரீகத்துக்கு பயன்படுத்திய பூஜை சாமான்கள் கண்டெடுக்கப்பட்டன. மேலும் குழந்தையை கொன்று புதைத்த இடத்திலும் உடலை தோண்டி எடுக்க முடிவு செய்துள்ளனர்.

இதுதொடர்பாக நிதிஷ், விஷ்ணுவை கைது செய்த போலீசார், வேறு யாரையும் நரபலி கொடுத்துள்ளார்களா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விஷ்ணுவின் வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்த நிதிஷ், அவரது சகோதரியுடன் பழகியதாகவும், இந்த தகாத உறவில் பிறந்த பெண் குழந்தையைத்தான் நரபலி கொடுத்துள்ளனர் எனவும் கூறப்படுகிறது.