விழுப்புரம் மாவட்டத்தில் 4 வழி சாலை பணிக்காக 5 கிராமங்களுக்கு செல்லக்கூடிய பிரதான சாலையை அடைக்க முயற்சி செய்வதாக கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் புகார் மனு கொடுத்துள்ளனர்.
விழுப்புரம் அருகே கெங்கராம் பாளையம், மல்ராஜன் குப்பம், ஜி. கரைமேடு, பூசாரி பாளையம், சின்ன மாங்குப்பம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் மாரிமுத்து தலைமையில் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது; கெங்கராம் பாளையத்தில் புதுச்சேரி நாகப்பட்டினம் இடையே 4 வழி சாலை பணிக்காக கடந்த 2018 முதல் வீட்டு மனைகள், நிலங்கள் ஆகியவை தேசிய நெடுஞ்சாலை துறையினரால் கையகப்படுத்தப்பட்டன. தற்போது சாலை அமைக்கின்ற ஒப்பந்ததாரர்கள் 2 கிலோமீட்டர் தூரம் உள்ள ஊரை முழுவதுமாக அடைப்பதற்கு ஆயத்தமாக்கினார்.

இதனை தொடர்ந்து, மல்ராஜன் குப்பம், ஜி. கரைமேடு, பூசாரி பாளையம், சின்ன மாங்குப்பம் உள்ளிட்ட கிராம மக்கள் ஏதேனும் அத்தியாவசிய தேவைக்காக விழுப்புரத்திற்கோ அல்லது புதுச்சேரிக்கோ செல்ல வேண்டுமெனில் பிரதான சாலையாக உள்ள கெங்கராம் பாளையம் வந்து தான் அங்கிருந்து பயணம் செய்ய வேண்டும். இதனால் 4 வழி சாலை பணிக்காக பிரதான சாலையை அடைக்கும் முடிவை நாங்கள் அனைவரும் ஒன்று கூடி எதிர்ப்போம். கெங்கராம் பாளையத்தில் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இங்குள்ள குழந்தைகள் சிறு வயதிலேயே இரண்டு கிலோமீட்டர் தூரம் நடந்தே சுற்றி வருவதற்கு ஆபத்தான நிலை உருவாகும். எங்கள் ஐந்து கிராமங்களிலும் ஆயிரக்கணக்கான ஏக்கர் விலை நிலங்கள் உள்ளதால் விவசாயிகளுக்கும் பெரும் சிரமம் ஏற்படும்.

ஆகவே மாவட்ட கலெக்டர் கெங்கராம் பாளையம் பகுதியில் நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டால் தான் நாங்கள் செல்லும் உண்மை நிலை தெரியும். சென்னை, திருச்சி நெடுஞ்சாலைகளில் முண்டியம்பாக்கம், செண்டூர் ஆகிய ஊர்களில் மக்கள் பயனடைய பேரிகார்ட் மற்றும் நடைபாலம் அமைத்துக் கொண்டுள்ளனர். அதேபோல் எங்கள் கிராமத்துக்கும் நடைபாலம் அமைத்துக் கொடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர்.