அரக்கோணம் ரயில்வே ஸ்டேஷனில் கஞ்சா போதையில் அரசு ஐ.டி.ஐயில் படிக்கும் 2 மாணவர்கள் தண்டவாளத்தில் குதித்து போதையில் தடுமாறி விழுந்து எழுந்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதிர்ஷ்டவசமாக அந்த நேரத்தில் ரயில் ஏதும் வராததால் உயிர் சேதம் ஏற்படவில்லை.
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் ரயில்வே ஸ்டேஷனில் மொத்தம் 8 நடைமேடைகள் உள்ளன. இவ்வழியாக தினமும் நூற்றுக்கணக்கான ரயில்கள் சென்று வருகின்றன. மேலும் இதில் அனைத்து நடைமேடைகளிலும் பயணிகள் நடமாட்டம் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். இந்த நிலையில் நேற்று மாலை 5.30 மணிக்கு நடைமேடை எண் 5 ல் அரக்கோணம் அரசு ஐ.டி.ஐ சீருடையில் 2 மாணவர்கள் கஞ்சா போதையில் தண்டவாளத்தை கடக்க முடியாமல் உருண்டு பிரண்டு கொண்டு இருந்துள்ளனர். ஒரு மாணவன் கஞ்சா போதையில் தண்டவாளத்தில் விழ இன்னொரு மாணவன் அவனை தாங்கிப் பிடிக்கிறான். அப்போது அந்த மாணவனும் போதையில் கீழே விழுகிறான்.

இதனைப் பார்த்து அதிர்ச்சடைந்த பயணிகள் இருவர், அவர்களை மீட்டு நடைமேடைக்கு அழைத்து வந்துள்ளனர். அதிர்ஷ்டவசமாக அந்த நேரத்தில் ரயில் எதுவும் வராததால் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. இந்த சம்பவங்களை அங்கிருந்த சக மாணவர்கள் மற்றும் ரயில் பயணிகள், ரயில்வே ஊழியர்கள், பார்த்து திகைத்து நின்றனர். இது குறித்து தகவல் அறிந்த ரயில்வே காவல்துறை சம்பவ இடத்திற்கு வந்து மாணவர்களை கண்டித்து அவர்களை விரட்டி அடித்துள்ளனர். இவர்கள் எந்த ஊரை சேர்ந்தவர்கள் என்ன விவரம் என்பது குறித்து கூட கேட்காமல் போலீசார் அவர்களை விரட்டி அடித்தனர். கஞ்சா போதையில் ஐ.டி.ஐ படிக்கும் மாணவர்கள் ரயில் தண்டவாளத்தில் கட்டி புரண்ட சம்பவம் அங்கிருந்த அனைவரின் மனதிலும் எங்கே செல்லும் இந்த பாதை என்ற பாடல் வரிகள் மட்டுமே ஞாபகத்திற்கு வந்தது.

மாணவர்கள் கஞ்சா போதையில் இருந்ததாக ரயில்வே போலீசார் தெரிவித்தனர்.அதே நேரம் ஐ.டி.ஐ படிக்கும் மாணவர்களுக்கு எங்கிருந்து கஞ்சா கிடைத்தது என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவத்தால் ரயில் நிலையம் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.