கென்யாவில் கிறித்துவ மதபோதகருக்கு சொந்தமான இடத்தில 47 கும் மேற்பட்ட மனித பிணங்கள் தோண்டி எடுக்கப்பட்ட சம்பவம் உலக நாடுகளை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது .
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கென்யாவில் மலிண்டி என்ற கடலோர நகரத்தில் பால் மெகன்சி என்ற மத போதகர் வசித்து வருகிறார் . இவருக்கு சில ஏக்கர் பரப்பளவில் சொந்தமாக நிலமும் உள்ளது .
சமீபத்தில் பால் மெகன்சிக்கு சொந்தமான இடத்தில் சந்தேகிக்குரிய நிலையில் ஏராளமானோர் தங்கி உள்ளனர் என்றும் . இங்கு 15க்கும் மேற்பட்டவர்கள் உடல் மெலிந்து மோசமான நிலையில் இருப்பதாகவும், நான்கு பேர் உயிரிழந்து விட்டதாகவும் காவல்துறையினருக்குத் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.
அப்போது நிலத்திலிருந்து தோண்ட தோண்ட சடலங்களாகக் கிடைத்துள்ளது. இதனைக் கண்டு காவல் துறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். முதலில் தோன்றும் போது 21 சடலங்கள் கிடைத்துள்ளன. அதற்குப் பிறகு தோண்ட தோண்ட 26 உடல்கள் கிடைத்துள்ளன. இதன் மூலம் மொத்தமாக 47 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
நிலத்தில் புதைக்கப்பட்டு இருந்த அனைத்து உடல்களும் வெள்ளை நிற பிளாஸ்டிக் கவரால் சுற்றப்பட்டு இருந்தன. அவர்கள் எப்படி இறந்தார்கள் என்பது ரகசியமாக உள்ளது. அங்கு இருப்பவர்களிடம் விசாரித்த போது, பட்டினியாக இருந்தால் இறைவனை நேரடியாகச் சந்திக்க முடியும் என மதபோதகர் தெரிவித்தார் எனக் கூறியுள்ளனர்.
ஒருவேளை இறந்து போனவர்கள் பட்டினி கிடந்து உயிரிழந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இது தொடர்பாக மத போதகர் பால் மெகன்சியை காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் அந்த பண்ணை நிலத்தில் உடல்கள் உள்ளதா என்பது குறித்து காவல்துறையினர் நிலத்தைத் தோண்டி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் தோண்ட தோண்ட சடலங்கள் கிடைத்துக் கொண்டே இருக்கின்றன.
கிடைத்த அனைத்து சடலங்களையும் காவல்துறையினர் மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பிரேதப் பரிசோதனை செய்த பிறகு இறந்தவர்களின் விவரங்கள் குறித்துத் தெரியும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.