ரூபாய் 20 லட்சம் லஞ்சம் வாங்கிய அமலாக்கதுறை அதிகாரி லஞ்ச ஒழிப்பு போலீஸ் அவரிடம் சிக்கியதை தொடர்ந்து மதுரை அமலாக்கத்துறை துணை இயக்குனர் அலுவலகத்தில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல் டாக்டர். சுரேஷ் பாபுவிடம் ரூபாய் 20 லட்சம் லஞ்சம் வாங்கி லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் மதுரை அமலாக்கத்துறை அங்கீத்திவாரி சிக்கினார். இதை தொடர்ந்து அதிரடி நடவடிக்கையாக அவரது அலுவலகத்தில் சோதனை நடத்த லஞ்ச ஒழிப்பு போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர். அதன்படி நேற்று மாலையில் மதுரை தபால் தந்தி நகர் பகுதியில் உள்ள அமாலாக்கத்துறை துணை இயக்குனர் அலுவலகத்துக்கு துணை சூப்பிரண்டு சத்தியசீலன் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் வந்தனர்.

ஆனால் அங்கு உரிய அனுமதி இல்லாமல் நுழைய முடியாது என அதிகாரிகள் தெரிவித்தனர். இதனை அடுத்து அந்த அலுவலகத்துக்குள் சோதனை செய்வதற்கு அனுமதி கேட்கப்பட்டது. நேற்று மாலை 6.15 மணி அளவில் அனுமதி கிடைத்ததால் லஞ்ச ஒழிப்பு போலீசார் அமலாக்கதுறை அலுவலகத்திற்குள் சென்று சோதனை ஈடுபட்டனர். இந்த அனுமதி கிடைக்கும் வரை அலுவலகத்துக்கு வெளியே சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக காத்திருந்தனர். இதற்கிடையே ஜே.என் நகரில் உள்ள அங்கிட் திவாரியின் வீட்டிலும் ஒரே நேரத்தில் சோதனை நடந்தது.

இதற்கிடையே துணை கமாண்டோ மார்க்கண்டே தலைமையில் இந்தோ- தீபத் எல்லை காவல் படையினர் 20 பேரும் மதுரை மாநகர போலீஸ் துணை கமிஷனர் சினேக பிரியா தலைமையில் ஏராளமான போலீசாரம் அமலாக்கத்துறை அலுவலகத்தின் முன்பு குவிக்கப்பட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இரவு 8 மணிக்கு பின்னரும் சோதனை தொடர்ந்து கொண்டிருந்தது. அப்போது அந்த அலுவலகத்தில் பணியாற்றி வரும் பெண் அலுவலர்கள் மற்றும் வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டனர். சோதனையின் போது சில முக்கிய ஆவணங்கள் லஞ்ச ஒழிப்பு போலீசார் வசம்சிக்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகின.
என்னென்ன ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு இருக்கின்றன. என்ற விவரம் சோதனையின் முடிவில் தான் தெரிவிக்கப்படும் எனவும் போலீசார் தெரிவித்தனர்.