வசூல்ராஜா எம்பிபிஎஸ் திரைப்பட பாணியில் மணல் கடத்தல் கும்பலிடமிருந்து அண்ணாமலை மாதம் ரூ.5 கோடி வசூலித்து வருகிறார். இதற்கான பட்டியலை விரைவில் வெளியிடுவேன் என்று கோவை அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் பரபரப்பு பேட்டியளித்து உள்ளார்.
கோவை பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன், கோவையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நேற்று மாலை நிருபர்களிடம் கூறியதாவது;-

கோவை தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலை, முற்றிலும் நம்பிக்கை இழந்து தவிக்கிறார். அப்போது என்ன செய்வது என்றே தெரியாமல், தினமும் பொய் பேசி வருகிறார்.
கோவை தொகுதி வேட்பாளர் என அறிவிக்கப்பட்டதும், இங்கேயே முகாமிட்டு, இங்குள்ள தொழில்முனைவோர் பல பேரை சந்தித்து, வசூல் வேட்டை நடத்தி வருகிறார். இவர், யார் யாரை சந்தித்தார்? எவ்வளவு பணம் வசூல் செய்தார்? என்ற பட்டியல் என்னிடம் தயாராக உள்ளது. அதை விரைவில் வெளியிடுவேன்.

அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன், என்னை அவமானப்படுத்தி விட்டார்’’ என என் மீது கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தால், அந்த வசூல் பட்டியலை கோர்ட்டில் சமர்ப்பிக்கவும் தயாராக இருக்கிறேன்.
கோவைக்கு என்னென்ன தேவை, நாம் என்ன செய்ய வேண்டும் என சிந்திக்காமல், கோவையில் யார் யாரை சந்தித்தால், எவ்வளவு பணம் கிடைக்கும் என பட்டியல் போட்டு வசூல் நடத்தி வருகிறார் அண்ணாமலை. இது, வெட்கக்கேடானது. திரைப்பட காமெடி வருவது போல், இவர் வசூல்ராஜா ஐ.பி.எஸ்.ஆக உள்ளார்.

இதுதவிர, மணல் கடத்தல் கும்பலிடம் இருந்து மாதம்தோறும் 5 கோடி ரூபாய் வசூல் செய்து குவிக்கிறார்.
சமீபத்தில் ஒரு மணல் வியாபாரி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் ரெய்டு நடத்திய போது, அண்ணாமலைக்கு 5 கோடி ரூபாய் கொடுத்தோம் என எழுதி வைத்துள்ளார். அந்த ஆதாரத்தை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

ஒரு பொய்யை திரும்ப திரும்ப சொல்வதால், அது உண்மை ஆகிவிடாது. அதை, அண்ணாமலை புரிந்து கொள்ள வேண்டும். கோவை முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பற்றி பேச அண்ணாமலைக்கு என்ன தகுதி இருக்கிறது.
அதனால் கேட்டால், நான், பி.இ., எம்.பி.ஏ படித்தேன் என்கிறார். நானும், பி.இ., எம்.பி.ஏ படித்தவன் தான். என்னோடு நேருக்கு நேர் விவாதிக்க தயாரா? தைரியம் இருக்கிறதா? இந்த தொகுதியில், அண்ணாமலைக்கு தோல்வி நிச்சயம்.

அதனால் தான் கண்டபடி உளறுகிறார். கோவை மக்களை காக்கத்தான், கோனியம்மன் கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு வேட்புமனு தாக்கல் செய்தேன், இந்த தொகுதியில் வெற்றிபெற வேண்டும் என வேட்புமனு தாக்கல் செய்யவில்லை என்று அவரே சொல்கிறார்.
அடுத்த பேட்டியில், நான் வெற்றி பெற்று அதை செய்வேன் இதை செய்வேன் என உளறுகிறார். இவ்வாறு அவர் கூறினார். சிங்கை ராமச்சந்திரன் கூறுகையில்;-

அண்ணாமலை, தவறாக உறுதிமொழி பத்திரம் சப்மிட் செய்து விட்டோம் என்பதை உணர்ந்து, இன்று (நேற்று) மாலை 5.17 மணிக்கு திருத்தப்பட்ட உறுதிமொழி படிவத்தை சமர்ப்பித்துள்ளார்.
இதை, தள்ளுபடி செய்ய வேண்டிய அதிகாரிகள், அதை ஏற்றுக்கொண்டுள்ளனர். இந்த உறுதிமொழி பத்திரம் 100 சதவீதம் செல்லாது. இதுபற்றி இந்திய தேர்தல் ஆணையத்தில் புகார் செய்வதுடன், நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளோம்’ என்றார்.