மெரினா கடற்கரையில் பிரமாண்டமான முறையில் கலைநயத்துடன் கட்டப்பட்ட அண்ணா, கலைஞரின் நினைவிடங்களை பொதுமக்கள் பார்வைக்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
மெரினா கடற்கரையில் நினைவிட வளாகத்தின் நுழைவாயிலில் அமைக்கப்பட்டிருந்த அண்ணா மற்றும் கலைஞரின் சிலைகளையும் திறந்து வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

உலகத் தமிழினத்தின் மிக உயர்ந்த தலைவராக திகழ்ந்த அண்ணா 1969 பிப்.3-ம் தேதி மறைந்த பின் அவருக்கு, சென்னைப் பல்கலைக்கழகத்தின் எதிரில் மிகச்சிறந்த கட்டிடக்கலை வடிவமைப்புடன் கலைஞரால் நினைவிடம் அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.
தமிழ்நாடு முதல்வராக 19 ஆண்டு காலம் நல்லாட்சி புரிந்து, தமிழ்நாட்டை வளப்படுத்தி, தமிழ் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, நவீன தமிழ்நாட்டின் சிற்பியாக விளங்கி, உலக வரலாற்றில் உன்னத புகழ்ச் சின்னமாகத் திகழும் கலைஞர் தன்னுடைய 95-ம் வயதில் 2018-ம் ஆண்டு மறைந்து அண்ணா நினைவிடம் அருகிலேயே நல்லடக்கம் செய்யப்பட்டார்.

அப்போது கடந்த 80 ஆண்டு பொதுவாழ்க்கை, 70 ஆண்டுகள் திரைத்துறை, 70 ஆண்டுகள் பத்திரிகையாளர், 60 ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினர், 50 ஆண்டுகள் திமுக தலைவர் என்று வாழ்ந்த காலம் முழுவதும் வரலாறாக வாழ்ந்தவர் கலைஞர். அதேபோல், நின்ற தேர்தலில் எல்லாம் வென்றவர்.
இந்தியாவில் இப்படி ஒருவர் இருந்தது கிடையாது. இனி ஒருவர் அவர் இடத்தை அரசியல் களத்தில் பிடிக்க முடியாது. அவர் பெருமைக்குரியவர். தாய் தமிழ்நாட்டை உருவாக்கிய தமிழினத் தலைவர் கலைஞர் ஆற்றிய அரும்பணிகளைப் போற்றும் விதமாக, அவரது வாழ்வின் சாதனைகளை பல்வேறு சாதனைகளை செய்தார்.

வருங்காலத் தலைமுறையும் அண்ணா நினைவிட வளாகத்தில் கலைஞருக்கும் நினைவிடம் அமைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன் அடிப்படையில், அண்ணா, கலைஞரின் நினைவிடங்களும் 8.57 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த நினைவிடங்களை பொதுமக்கள் பார்வைக்காக, முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு 7 மணிக்கு திறந்து வைத்தார். நிகழ்ச்சிக்கு வந்த முதல்வர் மு.க.ஸ்டாலினை அமைச்சர் எ.வ.வேலு வரவேற்றார்.

பின்னர் சென்னை கடற்கரை காமராஜர் சாலையில் அமைந்துள்ள நினைவிடங்களின் முகப்பு வாயிலில் அண்ணா நினைவிடம், கலைஞர் நினைவிடம் எனும் பெயர்கள் அழகுறப் பொறிக்கப்பட்டுள்ளதை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
அதன்பின்னர், அண்ணா நினைவிடம் மற்றும் கலைஞர் நினைவிடங்களை தலைவர்களுடன் சென்று பார்வையிட்டார்.

நினைவிட நுழைவாயிலை கடந்து உள்ளே செல்லும் வழியில் அண்ணா படிப்பது போன்ற சிலையும், வலதுபுறம் இளங்கோவடிகள் மற்றும் இடதுபுறம் கம்பர் சிலைகளும், நினைவிடங்களின் முன்பகுதி இரு புறங்களிலும் பழமையான புல் வெளிகளும், இடப்புறத்தில் அண்ணா அருங்காட்சியமும் அமைந்துள்ளன.
“எதையும் தாங்கும் இதயம் இங்கே உறங்குகிறது” எனப் பொறிக்கப்பட்டுள்ள அண்ணாவின் துயில்கொள்ளும் சதுக்கத்தைக் கடந்து சென்றவுடன், கலைஞர் அமர்ந்து எழுதும் வடிவிலான சிலையும், முத்தமிழறிஞர் கலைஞர் சதுக்கமும் அமைந்துள்ளன.

அதேபோல் இந்த சதுக்கத்தில், “ஓய்வெடுக்காமல் உழைத்தவர் இங்கே ஓய்வு கொண்டிருக்கிறார்” எனும் வாசகம் கலைஞரின் எண்ணப்படியே பொறிக்கப்பட்டுள்ளது.
கலைஞரின் இளமைக் காலம் முதல், அவர் வரலாற்றில் இடம் பெற்ற நிகழ்வுகள், கலைஞரின் படைப்புகள், அவர் சந்தித்த போராட்டங்கள், நிறைவேற்றிய பல்வேறு திட்டங்கள் தொடர்பான புகைப் படங்கள் கலைஞரின் எழிலோவியங்கள் எனும் அறையில் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், கலைஞரின் பொன்மொழிகள் கற்பாறைகளில் தமிழிலும் ஆங்கிலத்தில் பொறிக்கப்பட்டு நம் இதயத்திலும் பதியும் வண்ணம் அருமையாக அமைக்கப்பட்டுள்ளன.
இத்தகைய சிறப்பு மிக்க அண்ணாவின் புதுப்பிக்கப்பட்ட நினைவிடத்தையும், கலைஞரின் புதிய நினைவிடத்தையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். இந்த நிகழ்ச்சியில், சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள் துரைமுருகன், உதயநிதி ஸ்டாலின், கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, எ.வ.வேலு, சாமிநாதன்,

உள்ளிட்ட அமைச்சர்கள், எம்பி தயாநிதி மாறன் உள்ளிட்ட நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் தி.க. தலைவர் கி. வீரமணி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன், விசிக தலைவர் திருமாவளவன்,
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொகிதீன், பாமக சட்டமன்ற கட்சித் தலைவர் ஜி.கே.மணி, மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா, நடிகர் ரஜினிகாந்த், கவிஞர் வைரமுத்து, தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா,

பொதுப்பணித் துறை செயலாளர் சந்தர மோகன், பல்வேறு அரசு துறை செயலாளர்கள், துறைத் தலைவர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.