4 வார ஜாமீன் காலம் நிறைவடையும் நவம்பர் 24ஆம் தேதி நீதிமன்றத்தில் மீண்டும் சரணடையுமாறு சந்திரபாபு நாயுடுவுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது .
ஆந்திரப் பிரதேச திறன் மேம்பாட்டுக் கழகத்தில் நடைபெற்ற ஊழல் வழக்கில் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடுவுக்கு 4 வாரங்களுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி ஆந்திர உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
திறன் மேம்பாட்டுக் கழக ஊழல் வழக்கில் கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி சிஐடியினரால் கைது செய்யப்பட்ட நாயுடு, அன்றிலிருந்து ராஜமகேந்திராவரம் மத்திய சிறையில் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
உடல்நலக் குறைவு காரணமாக அவர் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான தீர்ப்பில் ஆந்திர உயர்நீதிமன்றம், செவ்வாய்க்கிழமை அன்று சந்திரபாபு நாயுடுவுக்கு நவம்பர் 24 வரை நான்கு வார இடைக்கால ஜாமீன் வழங்கியது.
4 வார ஜாமீன் காலம் நிறைவடையும் நவம்பர் 24ஆம் தேதி நீதிமன்றத்தில் மீண்டும் சரணடையுமாறு சந்திரபாபு நாயுடுவுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது . மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதைத் தவிர வேறு எந்த நடவடிக்கையிலும் ஈடுபட கூடாது என்று சந்திரபாபு நாயுடுவுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் இந்த 4 வார காலத்தில் சந்திரபாபு நாயுடு தொலைபேசியில் பேசவோ, அரசியல் நடவடிக்கைகளில் பங்கேற்கவோ, ஊடகங்களில் பேசவோ கூடாது என்றும் நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது .
செப்டம்பர் 9ஆம் தேதி கைது செய்யப்பட்ட சந்திரபாபு நாயுடு 53 நாட்களாக சிறையில் உள்ளார். அவரது முக்கிய ஜாமீன் மனு நவம்பர் 10ஆம் தேதி விசாரணைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தற்போது வழங்கப்பட்டுள்ள ஜாமீன் மூலம் சந்திரபாபு நாயுடு சிறையில் இருந்து வெளிவர அனைத்து ஏற்பாடுகளும் முடிவடைய ஓரிரு நாட்கள் ஆகலாம் என தெலுங்கு தேசம் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அவர் ஜாமினில் வெளிவந்த பின்னர் ஓய்வுக்காக ஹைதராபாத்தில் உள்ள தனது வீட்டிற்குத் திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது .
சந்திரபாபு நாயுடுவின் மனைவி புவனேஸ்வரி மற்றும் மகன் லோகேஷ் ஆகியோர் 72 வயதாகும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரின் உடல்நிலை குறித்து கவலை தெரிவித்தனர். சிறை அறையில் இருந்த வெப்பம் அவரது ஒட்டுமொத்த உடல்நிலை மோசமடைய வைத்திருப்பதாகவும் , தோல் நோய்த்தொற்றின் தீவிரத்துக்கும் தூண்டுதலாக இருந்ததாக அவர்கள் தெரிவித்தனர் .
சந்திரபாபு நாயுடு சிறையில் இருந்த சமயத்தில் அவரது மனைவி புவனேஸ்வரி அவரது கைதுக்கு நீதி கோரி கடந்த வாரம் பஸ் யாத்திரையை தொடங்கினார். அவரது மகன் லோகேஷ் நாயுடுவும் தனது யுவகாலம் பாதயாத்திரையை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தார் , ஆனால் விரைவில் அதை மீண்டும் தொடங்க உள்ளததாக அவர் தெரிவித்துள்ளார் .
சந்திரா பாபு நாயுடு சிறையில் அடைக்கப்பட்ட பிறகு, ஜன சேனா கட்சியின் (ஜேஎஸ்பி) தலைவர் கே பவன் கல்யாண், ஆந்திராவில் பாஜகவுடன் ஏற்கனவே இருந்த கூட்டணியை ஓரங்கட்டி, 2024 தேர்தலில் தெலுகு தேச கட்சியுடன் கூட்டணி வைக்க முடிவு செய்தார்.
தெலுகு தேச கட்சி தலைவர் சந்திரபாபு சிறையில் இருந்ததால், அடுத்த மாதம் நடைபெற உள்ள தெலுங்கானா சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதில்லை என்றும் முடிவு செய்திருந்தார் .
ஆந்திரப் பிரதேசத்தில், சந்திரா பாபு நாயுடு மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் சட்டச் சிக்கல்களில் சிக்கித் தவித்ததால், அனைத்து தெலுங்கு தேசம் கட்சி நடவடிக்கைகளும் ஸ்தம்பித்து இருந்தன .
இந்நிலையில் திங்களன்று, ஆந்திரப் பிரதேச சிஐடி சந்திரபாபு நாயுடுவுக்கு எதிராக மற்றொரு வழக்கைத் தாக்கல் செய்தது, அவரும் அவரது அரசாங்கமும் மதுபான நிறுவனங்களுக்கு சட்டவிரோதமாக அனுமதி வழங்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டது .
ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட எப்ஐஆரில் அவர் 3வது குற்றவாளியாக சேர்க்கப் பட்டிருந்தார் .
ஆந்திர பானங்கள் கழகத்தின் ஆணையர் டி வாசுதேவ ரெட்டி மற்றும் முன்னாள் அமைச்சர் கொல்லு ரவீந்திரன் ஆகியோர் அளித்த புகாரின் பேரில் சந்திரபாபு உள்ளிட்டோர் மீது மதுபான நிறுவனங்களுக்கு சட்டவிரோதமாக அனுமதி வழங்கியதாக எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது.
2016ல் பார்கள் செலுத்த வேண்டிய கட்டணத்தை நீக்கியதன் மூலம் சந்திரபாபு நாயுடு மற்றும் குற்றம்சாட்டப்பட்ட குற்றவாளிகள் ஆந்திரா அரசுக்கு ரூ.1,300 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக எப்.ஐ.ஆர் பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது .