தொடர்ந்து மர்மம்
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் உடல் தகனம் செய்யப்பட்டது. அவரது சாவில் தொடர்ந்து மர்மம் நீடிப்பதால் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நெல்லை மாவட்டம், திசையன்விளை அருகே கரைச்சுத்துபுதூர் பகுதியைச் சேர்ந்தவர் கே.பி.கே ஜெயக்குமார் (60). நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரான இவர் கட்டுமானம் மற்றும் ஒப்பந்தப் பணிகளில் ஈடுபட்டு வந்தார். கடந்த 2ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து மகன் கருத்தையா ஜெப்ரின் (28) உவரி போலீசில் அளித்த புகாரின்பேரில் ஜெயக்குமாரை தேடி வந்தனர்.
உடல் கண்டுபிடிப்பு
இந்நிலையில், ஜெயக்குமாருக்கு சொந்தமாக கரைச்சுத்துபுதூரிலுள்ள தோட்டத்தில் அவரது உடல் ஒரு பலகையில் குப்புற படுக்க வைக்கப்பட்டு வயரால் உடம்பு முழுவதும் கட்டப்பட்டு எரிந்த நிலையில் கடந்த 4ம் தேதி கண்டுபிடிக்கப்பட்டது.சம்பவ இடத்தில் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்தபோது, ஜெயக்குமார் உடல் கிடந்த இடத்தில் ஒரு மரத்தின் அடியில் மண்ணெண்ணெய் ஊற்றியதற்கான அடையாளம் காணப்பட்டது. ஜெயக்குமார் வயிற்றுக்கு அடியில் இரும்பு பிளேட் ஒன்றும் கிடந்துள்ளது. மேலும், உடல் கட்டி எரிக்கப்பட்டதற்கான தடயங்கள் இருந்தன. இவை அனைத்தையும் தடயவியல் நிபுணர்கள் சேகர்த்து சென்றனர். இந்நிலையில், பிரேத பரிசோதனை முடிந்து ஜெயக்குமார் உடல் நேற்று காலை அவரது 2 மகன்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
தலைவர்கள் அஞ்சலி
பின்னர் அவரது உடல் அவரது சொந்த ஊரான திசையன்விளை அருகே உள்ள கரைசுத்துபுதூருக்கு கொண்டு செல்லப்பட்டு, அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு ஜெயக்குமார் உடலுக்கு சபாநாயகர் அப்பாவு, காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, எம்பிக்கள் விஜய்வசந்த், மாணிக்கம் தாகூர், எம்எல்ஏ ஊர்வசி அமிர்த்ராஜ், முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் உட்பட பல்வேறு கட்சிகளை சேர்ந்த தலைவர்கள், தொழிலதிபர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். ஜெயக்குமார் இறப்பதற்கு முன் மாவட்ட எஸ்பிக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார்.அதில், பலரால் தனக்கு உயிருக்கு ஆபத்து உள்ளது என்று முக்கிய பிரமுகர்களின் பெயர்களை குறிப்பிட்டிருந்தார். இதனால் கொலை குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் ஜெயக்குமாரின் செல்போன் எண்ணுக்கு கடைசியாக யார் யார் பேசினார் என்பது குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். ஜெயக்குமார் கடித்ததில் குறிப்பிட்டுள்ள முக்கிய பிரமுகர்களுக்கும், ஜெயக்குமார் மரணத்துக்கு தொடர்பு உள்ளதா என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.

நேற்று 2வது நாளாக சம்பவ இடத்தில் எஸ்.பி சிலம்பரசன் விசாரணை நடத்தி தடயங்களை சேகரித்தார். ஜெயக்குமார் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள், மர்மங்கள் நீடிப்பதால் அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பதை போலீசார் உறுதி செய்யவில்லை. முழுமையான பிரேத பரிசோதனை அறிக்கை வெளிவந்த பிறகே அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது தெரியவரும்.
பணம்? பட்டியல் போட்டு மருமகனுக்கு லெட்டர்
ஜெயக்குமார் தனது மருமகனுக்கும் எழுதிய கடிதத்தில், ‘அன்பு மருமகன் ஜெபாவுக்கு கடிதம். நீ என் மீது கொண்டிருக்கிற பாசத்தாலும், நான் உன் மீது கொண்டுள்ள நம்பிக்கையாலும் இந்த கடிதத்தை உனக்கு எழுதுகிறேன். வரவேண்டிய பணம் மற்றும் கொடுக்க வேண்டியதை குறிப்பிடுகிறேன். இதுதவிர வேலவன் வசம் விபரங்களை தெரிந்து கொள்ளவும். அரசியல் கட்சி தலைவர்களிடம் இருந்து ₹89 லட்சம் வர வேண்டிய உள்ளது. ஒரு தொழிலதிபர் எழுதி கொடுத்த நிலத்தில் பிரச்னை ஏற்பட்டதால் ₹46 லட்சத்திற்கு 18 வருட வட்டியோடு வசூல் செய்ய வேண்டும். ஒரு பள்ளியின் பாக்கி தொகை ₹30 லட்சத்தை 4 வருட வட்டியோடு வசூல் செய்ய வேண்டும். நன்றி மருமகனே. அன்பு மாமா ஜெயக்குமார்’ என்று கூறி உள்ளார். இந்த கடிதத்தில் தொழிலதிபர்கள் உள்பட பலரது பெயர்களை குறிப்பிட்டு தனக்கு வர வேண்டிய தொகை மற்றும் தான் தர வேண்டிய தொகையை குறிப்பிட்டுள்ளார்.
மரணத்தில் சந்தேகம்: செல்வப்பெருந்தகை
ஜெயக்குமார் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின் தமிழக காங். தலைவர் செல்வபெருந்தகை நிருபர்களிடம் கூறியதாவது: ஜெயக்குமார் மர்ம மரணம் குறித்து போலீசார் முறையாக விசாரணை நடத்தி வருகின்றனர். நல்ல மனிதர், இவரது இறப்பு எங்களுக்கு மிகப்பெரிய வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது வெளிப்படையாக போலீசார் விசாரணை மேற்கொண்டு சட்டத்தின் முன் நிறுத்தவேண்டும். இந்த சம்பவத்தில் தொடர்புடைய உண்மை குற்றவாளிகள் எந்த அரசியல் கட்சியின் பின்புலமாக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு உறுதி அளித்துள்ளது.
இதுகுறித்து மாவட்ட எஸ்பியிடம் பேசினேன். விரைவில் நல்ல தகவல் வரும் என்று கூறினார். புலன் விசாரணை அடிப்படையில் உண்மை குற்றவாளிகள் விரைவில் கண்டுபிடிக்கப்படுவார்கள். எங்கள் கட்சி சார்பிலும் ஒரு குழு அமைத்து விசாரணை நடத்தி வருகிறது. அதன் அறிக்கையை அகில இந்திய தலைமையிடம் சமர்ப்பிப்போம். கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் உடல் மீட்கப்பட்டதாக கட்சியினர் தெரிவிக்கின்றனர். ஆகையால் இவரது மரணத்தில் சந்தேகம் உள்ளது. காவல்துறை வெளிப்படையான விசாரணை மேற்கொண்டால்தான் இவருடைய உயிரிழப்புக்கான காரணம் வெளியே தெரியவரும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பழிவாங்க நினைக்க வேண்டாம்: குடும்பத்தினருக்கும் கடிதம்
ஜெயக்குமார் குடும்பத்தினருக்கு எழுதிய கடிதத்தில், ‘மகள் கத்ரின் கல்யானத்தை டாக்டர் செல்வகுமார் உட்பட நீங்கள் அனைவரும் சேர்ந்து சிறப்பாக நடத்தி கொடுத்தீர்கள். எனது அன்பு உங்கள் அனைவர் மீதும் எப்போதும் உண்டு. ஜெயந்திக்கு இந்த விஷயங்கள் எதுவும் தெரியாது. நானும் சொல்லவில்லை. அவள் மன உளச்சல் காரணமாக பேசியது, நடந்து கொண்ட விதத்திற்காக மன்னிப்பு கேட்கிறேன். ஜெயந்தியும் அனைவரையும் நேசித்தவள் தான். உங்களை போலவே தன்னலம் பார்க்காமல் அனைவருக்கும் உதவி செய்தவள் தான். ஜெயந்திக்காகவும் பிள்ளைகளுக்காகவும் ஜெபித்துக்கொள்ளுங்கள் நன்றி. குடும்பத்தினர் யாரும் இதில் சம்பந்தப்பட்ட நபர்களை பழிவாங்க நினைக்க வேண்டாம். சட்டம் தனது கடமையை செய்யும்’ என்று எழுதியுள்ளார்.

முக்கிய பிரமுகர் தலைமறைவு
ஜெயக்குமார் கடந்த 4 நாட்களுக்கு முன்பு நெல்லை எஸ்பி சிலம்பரசனுக்கு தனது மரண வாக்குமூலம் என்ற பெயரில் புகார் கடிதம் எழுதியிருந்தார். அந்த கடிதத்தை அவரது மகன் புகார் அளிக்கும் போது போலீசில் ஒப்படைத்துள்ளார். அதன் அடிப்படையில் அவர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ள சில நபர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். இந்நிலையில் ஜெயக்குமாருக்கும் அப்பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும் நிலம் தொடர்பாக பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனால் பல வருட வட்டியோடு பணத்தை தர வேண்டுமென ஜெயக்குமார் கோரி வந்துள்ளார். இதுதொடர்பாக அவர்களுக்குள் புகைச்சல் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் ஜெயக்குமார் மர்ம மரணத்தை தொடர்ந்து அந்த முக்கிய பிரமுகர் தலைமறைவாகியுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரது செல்போனை போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
கொலையா? டிஐஜி விளக்கம்
நெல்லை சரக டிஐஜி (பொ) மாநகர போலீஸ் கமிஷனர் மூர்த்தி கூறுகையில், ‘காங்., மாவட்ட தலைவர் ஜெயக்குமார் மர்ம மரணம் தொடர்பாக அவர் எழுதிய கடிதம் கடந்த 3ம் தேதிதான் எஸ்பியிடம் அவரது மகன் கொடுத்துள்ளார். அதற்கு முன்னதாக எவ்வித புகார் கடிதமும் பெறப்படவில்லை. மேலும் அவரது உறவினருக்கும் ஒரு கடிதம் எழுதி உள்ளார். இந்த இரு கடிதங்களில் தெரிவிக்கப்பட்டுள்ள பெயர்கள் உள்ள நபர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. உடல்கூராய்வு அறிக்கை கிடைக்கவில்லை. அது கிடைத்தவுடன் உடலில் ஏதேனும் காயங்கள் உள்ளதா என்பது ஆய்வு செய்த பின் கொலையா, தற்கொலையா என்பது குறித்த முழுமையான தகவல் தெரியவரும்’ என்றார்.