- திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி அருகே உள்ள வஞ்சிவாக்கம் கிராமத்தில் அரசுக்குச் சொந்தமான இடங்கள் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி இருப்பதாகப் பல ஆண்டுகளாகப் புகார் இருந்து வந்தது.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆக்கிரமிப்புகள் செய்து புதிய ஓட்டு வீடுகள் அமைப்பதாகக் கூறி பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வஞ்சிவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ஏகாம்பரம் என்பவர் புகார் அளித்திருந்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் இன்று பொன்னேரி வருவாய்த்துறை துணை வட்டாட்சியர் பன்னீர்செல்வம்,திருப்பாலைவனம் வருவாய் ஆய்வாளர் பக்ருதீன்,திருப்பாலைவனம் காவல்துறை உதவி ஆய்வாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் பணியாளர்கள் காவல்துறையினர் என சுமார் 50க்கும் மேற்பட்டோர் சென்று ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஜேசிபி இயந்திரங்களைக் கொண்டு ஈடுபட்டனர்.
இதில் தான் குடிருக்கும் வீட்டை அகற்ற வேண்டாம் எனக் கூறி 74 வயது பாட்டி சின்னப்பொண்ணு என்பவர் வீட்டில் இருந்து வீட்டை விட்டு வெளியே வருவதற்கு அடம்பிடித்து அழுது புரண்டார்.தனக்கு இந்த வீட்டைத் தவிர வேறு வீடு இல்லை எனவும் இதனால் விட்டு விடுமாறும் அதிகாரிகளிடம் கெஞ்சினார்..
இருப்பினும் மனுதாரர் ஏகாம்பரம் வீட்டைக் கட்டாயம் இடித்தே ஆக வேண்டும் என அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதன் பேரில் வீட்டிலிருந்து வயதான பாட்டியை வெளியே தரதரவென இழுத்து வந்து ஜேசிபி இயந்திரங்கள் கொண்டு வீட்டை இடித்து அப்புறப்படுத்தினர். இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கொஞ்சம் இதையும் படிங்க : https://thenewscollect.com/the-enforcement-department-raided-the-house-of-former-admk-minister-vaithiyalingam/
மேலும் அப்பகுதியைச் சேர்ந்த அசோக் பிரியதர்ஷன் என்பவர் இந்த பகுதியில் உள்ள அரசு நிலம் ஆக்கிரமிப்பினை அகற்றுவதற்குப் பல நாட்களுக்கு முன்பே தான் மனு கொடுத்ததாகவும் அதன்படி அதிகாரிகள் வந்து ஆக்கிரமிப்பினை அகற்றிய பிறகும் மீண்டும் அதே இடத்தில் ஆக்கிரமிப்பாளர்கள் இடத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளதால் அந்த ஆக்கிரமிப்பினை இன்னும் அகற்றவில்லை எனவும் அதிகாரிகளிடம் கேட்டபோது அதிகாரிகள் முறைப்படி 15 நாட்களுக்குள் சம்மன் அனுப்பப்பட்டு அதன் பின்பு ஆக்கிரமிப்பு அகற்றப்படும் என உறுதி அளித்தனர்.