கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை அருகே ஆட்டோ டிரைவரை முன் விரோதம் காரணமாக வெட்டி கொலை செய்த சம்பவத்தில் நான்கு பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள் .
கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை காவல் சரகம் காப்புக்காடு என்ற இடத்தைச் சார்ந்த டேவிட் (வயது 50). இவர் ஆட்டோ ஒட்டி வந்தார் இவர் கடந்த மாதம் 31ம் தேதி மதுக்கடை ஒன்றில் மது அருந்தி கொண்டிருந்தபோது அங்கு வந்த ஐரேனியபுரம் என்ற இடத்தைச் சேர்ந்த நிர்மல் (வயது 26) என்பவருக்கும் டேவிட்டிற்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. டேவிட்டின் தாயார் குறித்து நிர்மல் ஆபாசமாக பேசியதை தொடர்ந்து அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது .

இந்த நிலையில் நேற்று டேவிட்டை நிர்மல் நெடுமானிக்குளம் என்ற இடத்திற்கு சவாரி இருப்பதாக வரும்படி போனில் அழைத்துள்ளார். அதன்படி டேவிட் ஆட்டோவில் நெடுமானிகுளத்திற்கு சென்றபோது, அங்கு ஒரு காரில் நிர்மல் உட்பட ஐந்து பேர் இருந்தனர் . காரில் இருந்து நிர்மல் இறங்கி டேவிட்டின் ஆட்டோவிற்கு சென்று உள்ளார். ஆட்டோவில் வைத்து டேவிட்டை நிர்மல் அறிவாளால் கொடூரமாக வெட்டியுள்ளார் . இதைத் தொடர்ந்து டேவிட் அங்கிருந்து தப்பி ஓட முயன்றுள்ளார் , இருப்பினும் அவருக்கு ஏற்பட்ட வெட்டு காயங்களால் சிறிது தூரத்திலே நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார் .
உடலில் இருந்து ஏராளமான ரத்தம் வெளியேறிய நிலையில், அவர் விழுந்து கிடந்ததை பார்த்த அந்தப் பகுதியில் உள்ளவர்கள் புதுக்கடை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் புதுக்கடை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து டேவிட்டை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் .

அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்த நிலையில், அவர் சிகிச்சை பலனளிக்காமல் உயிர் இழந்தார் . இந்த சம்பவம் குறித்து புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து நிர்மல், காட்வின ஜான் ராஜ், பின்னி பேட், பரமசிவன் உட்பட நான்கு பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் தலைமறைவாக உள்ள மேலும் ஒரு கொலையாளியை போலீசார் தேடி வருகின்றனர் .
பட்டப்பகலில் ஆட்டோ ஓட்டுநர் 5 பேர் கும்பலால் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.